கொரோனா வைரஸ் - 2019 (COVID-19)

இன்றைய (வைரஸ்) உலகின் முடி சூடிய இளவரசன், உலகத்தின் ஒட்டுமொத்த அனைத்து தரப்பு மக்களையும் கொடுங்கோல் ஆட்சி செய்யும் அழிவின் தத்துப் பிள்ளை கொரோனா.

கொரோனா வைரஸ் - 2019  (COVID-19)
கொரோனா வைரஸ் - 2019  (COVID-19)

கொரோனா வைரஸ் - 2019

           இன்றைய (வைரஸ்) உலகின் முடி சூடிய இளவரசன், உலகத்தின் ஒட்டுமொத்த அனைத்து தரப்பு மக்களையும் கொடுங்கோல் ஆட்சி செய்யும் அழிவின் தத்துப் பிள்ளை கொரோனா.

            இதை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உலக நாடுகள். வல்லரசு நாடுகளையும் நடு நடுங்க வைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவத்தின் அதிர்வலைகள் மிக அழுத்தமாகவே இருக்கப் போகிறது. பல நிபுணர்களின் கருத்துப்படி மூன்றாம் உலகப்போரின் பேரடித்தளம் (அடித்தளம்) கொரோனா. இவ்வுலக வரலாற்றில் பெரும் தாக்கத்தை உலகப் போர்கள் மட்டும் ஏற்படுத்தவில்லை. அதிலும், கொரோனா வைரஸின் முன்னோடிகள் தடம் பதித்துள்ளன. இங்கு குறிப்பிட்ட கொரோனா முன்னோடிகள் என்பது, ஸ்பேனிஸ் ஃப்ளூ,  பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை, இஃபோலா, நிஃபா, ஹெச் ஐ வி, ஸார்ஸ், டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்றவற்றை தோற்றுவித்த வைரஸ்கள். ஆனால், இந்த மோசமான வைரஸ்களில் முக்கியமானது கொரோனா வைரஸ். இவைகள் உங்களில் பலர் அறிந்ததே. ஆனாலும், இப்பதிப்பில் வைரஸ் என்றால் என்ன? அவை எதனால்? எவ்வாறு? பரவுகிறது என்றும் , சற்று சுருக்கமாக முன்னோடி வைரஸ்களைப் பற்றியும் பின்னர் விரிவாக  கொரோனா வைரஸ் பற்றியும்  ஆராய்வோம்.

 

1. வைரஸ் என்றால் என்ன?

  1. வெரில்லா வைரஸ்
  2. இன்ஃப்ளூன்சா வைரஸ்
  3. ஹெச் ஐ வி வைரஸ் 
  4. இஃப்போலா வைரஸ்
  5. நிஃபா வைரஸ்
  6. சார்ஸ்/மெர்ஸ்
  7. கொரோனா வைரஸ் (COVID-19)

 

வைரஸ் என்றால் என்ன?

  வைரஸ் (ஆங்கிலத்தில்) - தீநுண்மி (தமிழில்). வைரஸ் என்பவை நுண்ணோக்கி வழியாக மட்டுமே பார்க்கும் அளவிற்கு மிக சிறியதாக இருக்கும். இவை, புரத உறைகளால் சூழப்பட்ட ஒற்றை ஆர் என் ஏ துண்டுகள் ஆகும். அதுமட்டும், இல்லாமல் இவற்றை அரைகுறை உயிர் பெற்ற வேதிப்பொருளால் ஆன சிறிய அணு போன்ற துகள் என்பர். இவை, உறைந்தப் பனியிலும், உஷ்ணம் அதிகம் உள்ள பகுதிகளிலும் ஒரு படிகத் துகள் போன்றும், பல ஆண்டுகள் வரை செயல்படாத அணுகுண்டு போன்றும் இருப்பவை. வைரஸ்கள் முழுவதும் ஒட்டுண்ணியை அழித்து தன் இனத்தை பெருக்கி வாழக்கூடியது. இவை, அதற்கேற்ற தட்பவெப்பநிலை ஒட்டுண்ணியில் நிலவாத போதும் இவற்றின்  தகவமைப்பை, சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவை ஆகும். பின்பு, ஒட்டுண்ணிச் செல்லுக்குள் நுழைந்து முழுவதுமாக ஆட்கொண்டு உறுப்புகளை ஆளுகை செய்து, உயிரை அழிக்கக்கூடியது. ஒரு ஒட்டுண்ணியோடு நின்றுவிடாமல் மற்ற ஒட்டுண்ணி உடல்களுக்கும் சென்று அழிக்க கூடியவை இந்த தொற்று வைரஸ்கள்.

வெரில்லா வைரஸ் (பெரியம்மை நோய்):

  20 ஆம் நூற்றாண்டின் உலக மக்களை கொன்றுக் குவித்த மற்றொரு கொடூரன் வெரில்லா வைரஸ் ஆகும். இந்த வைரஸின் பெயர் மறந்து போகலாம். ஆனால்,இது தோற்றுவித்த பெரியம்மை நோயை  அன்றைய தலைமுறையினர் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு, இந்நோய் பெரும் சவாலாக அமைந்து ஆண்டுக்கு ஐந்து மில்லியன் (50 லட்சம்) மக்களை தாக்கி அதில் இரண்டு மில்லியன் (20 லட்சம்) மக்களை விழுங்கி ஏப்பம் விட்டது. அத்தோடு நின்று விடாமல் உயிர் பிழைத்தவர்களின் கண்களை பறித்து அவர்களின் வாழ்க்கையை இருளாக்கியது. அம்மை புண்கள் நீங்காத வடுவாய் அவர்களின் உடலிலும் தன் தாக்கத்தை முத்திரைப் பதித்தது.

      இந்த வெரில்லா வைரஸின் பிறப்பிடத்தை ஆராய்ச்சி செய்யும்போது அதிர்ச்சி கொடுத்து பிரமிக்க வைத்தது. என்னவென்றால், 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த எகிப்து மம்மிகளிலும் அம்மைப்புண்ணின் வடுவைக் கண்டுபிடித்தார்கள். அதனால், இதை முழுமையாக அழிக்கும் முயற்சியில் ஈடுபட்ட எட்வர் ஜென்ரல் 1976-இல் ஒரு தடுப்பூசியை கண்டுப்பிடித்தார். பின்பு, பல தடைகளை தாண்டி இந்த வைரஸை முற்றிலும் ஒழித்து பிரமாண்ட வெற்றி கொண்டது மனித இனம். இதை தொடர்ந்து சின்னம்மை, தட்டம்மை போன்ற வைரஸ் நோய் தாக்குதல்  நடந்த போதிலும் அதையும் மனித இனம் எதிர்கொண்டு முறியடித்து தன் வெற்றியை பறைசாற்றியது.

 

இன்ஃப்ளூன்ஸா வைரஸ் (ஸ்பேனிஸ் ஃப்ளூ நோய்):

  20 ஆம் நூற்றாண்டில் மிகவும் அசாதாரன நிலையை ஏற்படுத்தி, உலக நாடுகளுக்கு முதன் முறையாக வைரஸ் உலகின் அபாயகரமான அழிக்கும் ஆற்றலை, வெளிச்சம் போட்டு காட்டி மனிதர்களை மிரளவைத்தது. அதன் பெயர்தான், இன்ஃப்ளூன்ஸா. இந்த வைரஸால் வந்த பெரும் சமூகத்தொற்று நோயே ஸ்பேனிஸ் ஃப்ளூ ஆகும்.

 முதலில் அமெரிக்காவில்  ஒரு படைவீரருக்கு இத்தொற்று இருப்பதை கண்டுப்பிடித்தார்கள். அதற்குள், இத்தொற்று 675 மில்லியன் அமெரிக்கர்களை அழித்துபோட்டது.

   பின்பு, 47 உலகநாடுகளுக்கு காட்டுத்தீ போன்று பரவி 500 மில்லியன் (50 கோடி) அதாவது அன்றைய மக்கள் தொகையில் மூன்றில் ஒன்று என்ற கணக்கில் உலகத்தை சிதைத்து கொண்டிருந்தது. ஒரு வருடத்திற்குள் அதாவது 1919 -இல் இந்த சமூகத் தொற்று கோழியிலிருந்து மனிதர்களுக்கு பரவியதை வைரஸ் வேட்டையர்களான விஞ்ஞானிகள் கண்டறிந்து இந்நோய் பரவிய நாடுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து பிறநாடுகளை எச்சரித்து இந்த வைரஸை அழித்தார்கள். இதை, மிக விளக்கமாக எழுத்தாளர் 'ஜான். ம். ஃப்பெரி' என்பவர் "தி க்ரேட் இன்ஃப்ளூன்ஸா" என்ற புத்தகத்தில் விவரித்துள்ளார்.

 

ஹெச் ஐ வி வைரஸ் (எய்ட்ஸ் நோய்):

மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தனது வசந்த மண்டபமாக மாற்றி மயாணம் வரைக் கொண்டு சென்றது எய்ட்ஸ் நோய். முதலில் ஆப்ரிக்காவில் 1959-இல் இந்நோய் கண்டுப்பிடிக்கப்பட்டது.

    ஆனால், மனித உடலில் இந்நோயை செயல்படுத்தும் வைரஸின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வது சோதனைசெய்து வைத்தியம் பார்ப்பவர்களுக்கு பெரும் புதிராய் இருந்தது. அதற்குள், சுகாதாரமற்ற மருத்துவமனைகள், விபச்சாரக் கூடங்கள் மூலம் உலகின் அனைத்து எல்லைகளையும் கடந்து பரவியது. இத்தொற்றால் உலகம் முழுவதிலும் ஆண்டுக்கு 1 மில்லியன் (10 லட்சம்) அதாவது நாள் ஒன்றுக்கு 273 பேர் என்ற கணக்கில் கொத்து கொத்தாக இறந்தார்கள். இப்படி இருக்க, பல ஆராய்ச்சிக்கு பிறகு, 1980-இல் 'ஹெச் ஐ வி' என்ற வைரஸ் குரங்கிலிருந்து மனிதனுக்கு தொற்றியது கண்டுப்பிடிக்கப்பட்டது. ஆனால், தடுப்பூசி இன்றும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. இருந்த போதும் சிறந்த உணவுக் கட்டுப்பாடுடன், மருத்துவ கண்காணிப்பினால் மரணத்தை சில வருடங்கள் இந்நோய் பாதித்த மனிதர்கள் தள்ளி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கொரோனா மாதிரி ஹெச் ஐ வி வைரஸ இவ்வளவு சாதாரணமாக இருமல், தும்மல் மூலம் எல்லாம் பரவவில்லை. 

இஃப்போலா வைரஸ் (இஃப்போலா நோய்):

இந்த நோய் 1967-இல் ஆப்ரிக்கக் கண்டத்தில் வவ்வால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவியது. இந்நோய் மிகுந்த மரணவலியைக் கொடுத்து உறுப்புகளை அழுகச் செய்து, மரணத்தின் உச்சாணி கொம்பில் மனிதனை நிறுத்திய கொடுமையான வைரஸ்ஸாகும்.

  அதிவேகமாக கண், மூக்கு, வாய், இருமல், தும்மல், இரத்தம், வியர்வை, கண்ணீர், வாந்தி, மலம், சிறுநீர் போன்ற காரணிகள் மூலம் இந்நோய் தொற்று ஆப்ரிக்க மக்களைக் கொன்று குவித்தது. மிக முக்கிய காரணமாக கருதப்படுவது சுகாதரம் இல்லாத நிலைகள் தான்.

   மேலைநாடுகளில் இந்நோய் தொற்று அதிகம் இல்லை. இஃப்போலா என்ற ஆறு பாயும் இடங்களில் பரவியதால் இதற்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.

நிஃபா (என் ஐ வி) வைரஸ் (நிஃபா நோய்):

 1998- இல்  மலேசியாவில் உள்ள நிஃபா என்ற இடத்தில் முதன் முதலில் தோன்றியதால் இதற்கு இப்பெயர் வைக்கப்பட்டது. இந்நோய் 8 மாத இடைவெளிக்குள் ஆயிரக்கணக்கானவர்களை பாதித்து நூற்றுக்கணக்கானவர்களை கொன்றது .

       பின்னர், சிங்கபூரிலும் பரவி நூற்றுக்கு மேற்பட்டவர்களைக் கொன்றது. 'என் ஐ வி' என்ற வைரஸ் தாக்கிய வவ்வால்கள் கொய்த பழங்களை உண்டதன் மூலம் பன்றிகளுக்கு பரவியது. பின்னர், பன்றி பண்ணையில் வேலை செய்யும் மனிதர்களுக்கு தொற்றி மூளையை பாதித்தனால் மிகுந்த தலைவலியோடு இறந்து போனார்கள். 1999-இல் சுகாதார விழிப்புணர்வின் மூலம் தொற்றுப் பரவலை தடுத்தனர்.  2001-இல் பங்களாதேஷிலும் பின்பு இந்தியாவில் கேரளாவிலும் பரவி நூற்றுக் கணக்கில் மனித இழப்பை ஏற்படுத்தியது.

 

சார்ஸ் / மெர்ஸ் கொரோனா வைரஸ்:

          தற்போது 2020-இல் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா வைரஸ் ஆனது, சார்ஸ்/மெர்ஸ் வைரஸ் குடும்பத்தை சார்ந்ததுதான்.

      இந்த வைரஸ்கள்  2003 ஆம் வருடத்தில் சீனாவில் மியான்மர் எல்லைப் பகுதிகளில் தோன்றியது. இதில்  சார்ஸ் வைரஸ் வவ்வால்கள், பன்றிகள், எறும்பு தின்னிகள் மூலம் மனிதர்களுக்கு பரவியது.

        மெர்ஸ் வைரஸ் ஒட்டகம் மூலம் மனிதர்களுக்கு பரவியது. இத்தொற்றினால் சீனாவில் ஆண்டுக்கு 8000 நபர்கள் பாதிக்கப்பட்டு அதில் 750 பேர் செத்து மடிந்தார்கள். உலக அளவில் 17 நாடுகளில் பரவி நூற்றுக் கணக்கில் மக்களைக் கொன்று குவித்து கொரோனாவிற்கு முன்னோடியாகத் திகழ்ந்தது.

கொரோனா வைரஸ் (COVID-19, கொரோனா நோய்):

CORONA = CROWN + RNA

 

 

 கொரோனா வைரஸ் கிருமி தொற்று பற்றி உயிரியல் விளக்கத்தை கீழ்க்கண்டவாறு பதிவிடுகின்றேன். முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ்.

ஒரு ஆர்என்ஏவைச் (நமது செல்களில் ஜீன் எனப்படும் டிஎன்ஏ இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டிஎன்ஏவின் அரைகுறை வடிவமான RNA)  சுற்றி ஒரு புரதம் (Protein) மற்றும் கொழுப்பு சேர்ந்த ஒரு உறைதான் கொரோனா வைரஸ்.  (ஆல்கஹால் கொண்ட சானிடைசர்கள், சோப்பு நுரை பட்டால் இந்த உறை கரைந்து வைரஸ் அவுட்). அந்த உறையின் மீது ஆங்காங்கே முட்கள் காணப்படும். இது தான் கொரோனா வைரஸ். இந்த முட்களின் வேலை எளிதாக எதிலும் ஒட்டிக் கொள்வதே.  இந்த முட்களும் புரதத்தால் ஆனவையே.

  

  கொரோனா வைரசில் இந்த முட்கள் பார்ப்பதற்கு கிரீடத்தில் (Crown) இருக்கும் வேலைப்பாடு போல இருப்பதால் இந்த வைரசுக்கு கொரோனா வைரஸ் எனப் பெயர் வந்தது.

  

இதை ஏன் அரைகுறை உயிரி என்கிறோம். இந்த வைரஸ்களால் தானாக வாழ முடியாது. இது ஒரு முழுமையான ஒட்டுண்ணி அல்லது ஏதோ ஒரு உயிரினத்தின் செல்லுக்குள் புகுந்து அந்த செல்லில் இருக்கும் திட, திரவப் பொருட்களையே உணவாக்கிக் கொண்டு பின்னர் பல்கிப் பெருகுவது தான் இவைகளின் வேலை. செல்லுக்கு வெளியே சில மணி நேரமோ அல்லது சில நாட்களோ தான் இதனால் தாக்குப் பிடிக்க முடியும்.

   இந்த வைரஸ் மூக்கு, வாய் அல்லது கண் வழியாக உள்ளே நுழைந்தவுடன் முதலில் தொண்டைப் பகுதியை தாக்குகிறது. தொண்டையில் உள்ள திசுக்களின் செல்களில் இது பல்கிப் பெருகியவுடன் தான் தொண்டை வலியும் இருமலும் தொடங்குகிறது. இந்த வைரஸ்களை எதிர்த்து நம் உடலின் எதிர்ப்பு சக்தி (Immune system) உடனே மோதலை தொடங்குகிறது. அந்த மோதலின் அறிகுறி தான் காய்ச்சல். பெரும்பாலான வைரஸ்கள் அதிக வெப்ப நிலையை தாங்க முடியாதவை என்பதால், உடலின் வெப்ப நிலையை உயர்த்தி வைரஸ்களை காலி செய்ய நமது உடலின் எதிர்ப்பு சக்தி முயற்சிக்கிறது. இந்த மோதலின்போதே பெரும்பாலான வைரஸ்களை நமது உடல் கொன்று விடுகிறது (கொரோனா வைரஸ் உள்பட). இதனால் நமது உடலின் Immune system ஒரு மாபெரும் பாதுகாப்பு அரணாக விளங்குகிறது.

வைரஸோ, பாக்டீரியாவோ அல்லது வேறு ஒரு நுண்ணுயிரோ உடலுக்குள் புகுந்தவுடன் அவற்றை நமது உடல் இரு வகையான காரணிகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கிறது. முதலாவது அந்த நுண்ணுயிர் வெளியிடும் வேதியியல் பொருட்கள், இரண்டாவது அந்த நுண்ணுயிரின் உருவம். இது வெளியில் இருந்து வந்த பொருள் என்பதை கண்டுபிடித்த உடனே நமது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் அவற்றை கொல்லும் வேலையில் இறங்குகின்றன. வைரஸ், பாக்டீரியாவை அப்படியே விழுங்கி ஏப்பம் விடும் வேலைக்கு Macrophages, Neutrophils போன்ற அடியாட்களை வெள்ளை அணுக்கள் அனுப்புகின்றன. ஆனால், இதையும் தாண்டி வைரஸோ பாக்டீரியாவோ உடலை பதம் பார்க்க ஆரம்பித்தால், அடுத்த கட்ட அரண்கள் வேலையில் இறங்கும். அதில் ஒன்று Innate lymphoid cells. இதன் ஒரு பிரிவான T- Killer cellகளின் வேலை வைரஸ்களால் பாதிக்கப்பட்ட உடல் செல்களை கொன்று, வெளியேற்றி உடல் திசுக்கள் மேலும் மோசமடையாமல் தடுப்பது. மேலும் வைரஸ்களுக்கு உணவாகிக் கொண்டிருக்கும் செல்களின் எண்ணிக்கையை குறைப்பது. இது தான் இதன் வேலை. அதே நேரத்தில் Macrophages, Neutrophils போன்றவற்றால் தடுக்க முடியாத வைரஸ்களை ஒழித்துக் கட்ட நமது உடல் அனுப்பும் பிரம்மாஸ்திரம் தான் B cells எனப்படும் வைரஸ்களை தாக்கும் செல்கள். இந்த செல்கள் வைரஸ்களின் உருவத்தை அடையாளம் கண்டு, அதன் மீது ஒட்டிக் கொண்டு, அப்படியே இழுத்துச் சென்று Lumph nodes எனப்படும் நிணநீர் சுரப்பிகளில் வைத்து, அங்கு சுரக்கும் ரசாயனங்கள் உதவியோடு வைரஸ்களை கொல்லும். இந்த உடல் எதிர்ப்பு சக்தி ஒரு பக்கம் இருக்க, தொண்டைப்பகுதியை  அடைந்த கொரோனா வைரஸ்கள் அடுத்ததாக நமது உடலை பாதிப்பது நுரையீரலை.

நுரையீரலின் உள் சுவற்றில் இருப்பவை மிக லேசான பில்லியன் கணக்கான எபிதீலியல் செல்கள். இந்த செல்களில் கொரோனா வைரஸ் ஒட்டிக் கொண்டு, துளை போட்டு தனது ஆர்என்ஏவை உள்ளே நுழைக்கும்.

இந்த ஆர்என்ஏ செல்லுக்குள் போய் லட்சக்கணக்கில் தனது பிரதிகளை ஜெராக்ஸ் மெசின் மாதிரி காப்பி எடுக்கும். இந்த ஒவ்வொரு ஆர்என்ஏவும் ஒரு வைரசாக மாறும். அந்த செல் முழுக்கவே வைரஸ்களால் நிறையும்போது, அந்த செல்லே வெடித்து மடியும். அந்த வெடிப்பில் இருந்து கிளம்பும் லட்சக்கணக்கான வைரஸ்கள் அடுத்தடுத்த செல்களை இதே போல தாக்கி அழித்து,பல்கிப் பெருகும்.

  10 நாட்களில் நுரையீரலின் பெரும்பாலான செல்களை இந்த வைரஸ்கள் ஆக்கிரமிக்கும். இதுவரையும் கூட பிரச்சனை அதிகமில்லை. ஆனால், இந்த வைரஸ்களை அழிக்க நமது உடலின் Immune cells எனப்படும் எதிர் தாக்குதல் செல்கள் நுரையீரலில் நுழைந்து தாக்க ஆரம்பிக்கும்போது தான் பிரச்சனையே துவங்குகிறது. மற்ற வைரஸ்களில் இருந்து கொரோனா இங்கே தான் மாறுபடுகிறது.

       

இந்த கொரோனா வைரஸ், நமது உடலின் எதிர் தாக்குதல் செல்களுக்குள்ளேயே நுழைந்து அதையும் சேதப்படுகின்றன. சேதப்படுத்துவதோடு மட்டுமல்ல, அந்த செல்களின் ஜீன்களில் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. நமது Immune system செல்கள் ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாறிக் கொள்வது சைட்டோகைன்ஸ் (Cytokines) எனப்படும் ஒரு வேதிப் பொருள் மூலம் தான். ஜீன்கள் பாதிக்கப்பட்ட எதிர் தாக்குதல் செல்கள் குழப்பமான சைட்டோகைன் தகவல்கள் அனுப்ப, நுரையீரலை பாதுகாக்க கிளம்பி வரும் Neutrophils செல்கள், கொரோனா வைரஸ்களுக்கு பதிலாக உடலின் எதிர்ப்பு சக்தி செல்களை தாக்க ஆரம்பிக்கும். அதே போல பாதிக்கப்பட்ட நுரையீரல் செல்களை தற்கொலை செய்ய வைத்து நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டிய வேலைக்காக வரும் T- Killer cellகள் வந்த வேலையை விட்டு விட்டு, நன்றாக இருக்கும் நுரையீரல் செல்களை அழிக்கச் சொல்லி தகவல் தரும்.

 இதனால் நுரையீரல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, அடுத்ததாக பாக்டீரியா தாக்குதல், நிமோனியா உள்ளிட்ட தோற்று நோய்களுக்கு ஆளாக நேரிடும். இந்த இடத்தில் தான் மரணங்கள் நிகழ்கின்றன. இப்படி உடலின் எதிர்ப்பு சக்தியையே நமது உடலுக்கு எதிராக திருப்பி விடுவதில் தான் கொரோனா வைரசின் முழு சக்தியும் அடங்கியுள்ளது. வைரசின் உருவத்தை வைத்து அடையாளம் காணும் B- cellகள் கூட கொரோனாவிடம் இதுவரை எளிதில் வெற்றியை ஈட்டவில்லை. இந்த வைரஸ்கள் அனுப்பும் வேதியல் தகவல்கள் (Cytokines) எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இல்லை. அவை லட்சக்கணக்கான வகைகளில் மாறிக் கொண்டே இருப்பதால் T-killer cells, B cells ஆகியவற்றால் இவற்றை சரியாக அடையாளம் காண முடியவில்லை. இது தான் இந்த வைரசுக்கு எதிராக மருந்தோ தடுப்பு ஊசியோ தயாரிப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

    

           நாம் உண்ணும் அல்லது ஊசி மூலம் போட்டுக் கொள்ளும் மருந்துகள் உடலுக்குள் சென்றவுடன் வேதியியல் தகவல்களாக மாறித்தான் நோயை ஏற்படுத்தும் கிருமிகளோடு நேரடியாக மோதுகின்றன அல்லது உடலின் Immune system- உடன் பேசி, வேண்டிய எதிர்ப்பு மருந்தை உடலையே தயாரிக்க வைக்கின்றன. ஆனால், கொரோனா நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுவிடுவது தான் இந்த வைரசுக்கு எதிராக எந்த மருந்தை அளிப்பது என்ற குழப்பத்தில் மருத்துவ உலகை ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ்களின் கெமிக்கல் தாக்குதல்களால் குழம்பிப்போன T-killer cells, B cells-களும் ஏற்கனவே கொரோனா பாதித்த நுரையீரல்களை மேலும் பாதித்து உலகெங்கும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

   

    ஆனால், ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை, நோய் எதிர்ப்பு சக்தியில் பிரச்சனை உள்ளவர்களில் தான் இந்த உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகிறது. நல்ல உடல் நிலையில் உள்ளவர்களுக்கு பிரச்சனை குறைவாகவே உள்ளது. உடலில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பெரும் குழப்பத்துக்கிடையிலும் பெரும்பாலான நேரங்களில் நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டம் கொரோனா வைரஸை தோற்கடித்துவிடுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையால் உடலின் எதிர்ப்பு சக்தி முடங்குகிறது. அதே போல இதயக் கோளாறு, பி.பி உள்ளவர்களின் உடலில் நுண்ணிய ரத்தக் குழாய்கள் போதிய ரத்தத்தை எடுத்துச் செல்வதில் சிக்கல் வருவதால், உடலின் எல்லா பகுதிக்கும் போதிய சக்தி கிடைப்பதில்லை, நோய் எதிர்ப்பு சக்தி உள்பட. ஆனால், சர்க்கரை அளவு, பிபி மருந்துகள் மற்றும் உடற்பயிற்சி போன்றவை மூலம் உடலைக் கட்டுப்பாட்டில் வைப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை. இங்கேயும் உடலின் எதிர்ப்பு சக்தி கொரோனாவை தோற்கடித்துவிடுகிறது என்பது தான் நல்ல செய்தி. கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிடுவார்களா? என்பது தெரியவில்லை.

இன்னும் மருந்து கண்டுபிடிக்க இயலாத நிலையில், இந்த நோயில் இருந்து தப்பிப்பதே உசிதம். இந்த நோய் தாக்குதலை தவிர்ப்பதே இதற்கான இப்போதையே ஒரே மருந்து!

 REFERENCE :   உயிர்தொழில் நுட்ப துறை (Biotechnology )

 

தனித்திருப்போம்!விழிப்புடன் இருப்போம்!!வீட்டிலேயே இருப்போம்!!!கொரோனாவை ஒழிப்போம்!!!!

 

 

 

 

 

What's Your Reaction?

like
6
dislike
0
love
1
funny
0
angry
0
sad
0
wow
6