பனைமரம் - பழந்தமிழனின் தனிச் சொத்து

கருப்பு கண் விழித்து, மண்ணுக்குள் வெள்ளையாய் பார்வை விட்டு, பசுமையாய் விடிந்த தன் வாழ்வில், வான் ஓங்கி நின்ற மரம், பனைமரம். வாளோடு பிறந்த மூத்த தமிழ்குடியின் தோளோடு பிறந்த மரம், பனைமரம். போரில் வெற்றி பெற்ற வீரனுக்கு நாடறிய புகழ் பாடி பாராட்ட, பனம்பூ தந்த மரம், பனைமரம். சங்ககாலக் காதலர்களின் நெஞ்சங்களை, மஞ்சங்களில் பரிமாற பனை ஓலை தூது கொடுத்துக் காதல் வளர்த்த மரம், பனைமரம். கவிப்பாடும் கவிஞனுக்கு, கலை உலக காவியங்களைப் படைக்க, பனை ஓலை ஏடு தந்த மரம், பனைமரம். பாரில் படிப்போருக்கு தமிழனின் பழஞ்சுவடியை, பல்லாயிரம் ஆண்டு அறிவுக்களஞ்சியமாக பாதுக்காத்து, உலகப்பொது மறையாக தந்த மரம், பனைமரம். தமிழனின் ஆரம்பக்கால குடில் முதல் இன்றுள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் வரை, கட்டுமானப் பொருட்களை தந்த மரம், பனைமரம். இயற்கை விவசாயம் தொடங்கி, வெளிநாட்டு வியாபாரம் வரை, தன்னை அடியோடு சாய்த்து பிளந்தாலும், நார் நாராய் கிழித்தாலும், தமிழனின் பொருளாதார உயர்வை லாபமாக தந்த மரம், பனைமரம்.

பனைமரம் - பழந்தமிழனின் தனிச் சொத்து

பனைமரம்:

     விதைப் போட்டு நட்டது இல்லை, வேலி கட்டி வளர்த்தது இல்லை, தண்ணீர் ஊற்றி பார்த்து இல்லை, களை எடுத்த செய்தி இல்லை. ஆனாலும், வான் உயர்ந்து நின்ற மரம். உச்சி முதல் பாதம் வரை எத்தனையோ பயன்களை வளர்ப்போருக்கு தந்த மரம். பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழக மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்ந்த மரம், பனைமரம். தமிழனின் பிறப்பு தொடங்கி இறப்பு வரை, சமயச் சடங்குகள் தொடங்கி வீட்டு விசேஷங்கள் வரை, கல்வி தொடங்கி கலாச்சாரம் வரை பனைமரப் பண்பாடே எங்கும் எதிலும் வியாபித்திருந்தது. இதனால், பனைமரம் பழந்தமிழனின் தனிச் சொத்தாகவே பார்க்கப்படுகிறது.

பெண் மரம் ‘காய் காய்க்கும், ஆண் மரம் பூ பூக்கும். ஆனாலும், அதிசய மரம் தாங்க. ஏனென்றால்? பனங்காயை தவிர்த்து, மற்ற எல்லா பயனும் ஆண் மரமும் கொடுக்கும். மண்ணில் வீழ்ந்த பனங்காய் என்னும் கருப்பு முத்துகளின் விலையாய், இயற்கையின் அருட்கொடையாய் ஒரு ஆயுள் (14 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள்) கழித்து மண்மேல் வளர்ந்த கருப்பு வைரம் இந்த பனைமரம். தான் வளரும் உயரத்தின் அளவை போன்று மூன்று மடங்கு வேரை மண்ணில் செங்குத்தாக பாய்ச்சியதாலோ என்னமோ? மூன்று தலைமுறைகள் வரை பலன்கொடுக்கும் பனைமரம் கற்பகதகு என்றும், தலவிருச்சமாகவும், பல கோயில்களில் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

               

பனையின் வளர்ச்சிப் பருவங்கள்:

சித்திரை   - சிறுக்குறும்பை

வைகாசி   - வளர்குறும்பை

ஆனி      - தலையை சீவு

ஆடி       - ஓடித்திரி

ஆவணி    - பாயை விரி

புரட்டாசி   - திரட்டி சுருட்டி பரனில் ஏற்று

ஐப்பசி     - அவித்துப் புடி

காரத்திகை - கவ்விப் புடி

மார்கழி    - மகிழம் போடு

தை       - தரையை தட்டு

மாசி       - முடியை கட்டு

பங்குனி   - பருவ மழை, பதனி எடுத்தல்

இப்படி, மாதம் பன்னிரண்டிலும் பனைமரத்தின் பருவங்களுக்கு ஏற்ற, பயன்களை தந்த மரம் பனைமரம். ஆனாலும், சில ஆண்டுகள் மழை பெய்து வறட்சி ஏற்படுவதுண்டு. அப்போதும் வறுமையின் பிடியில் உயிர் போகத்துடிக்கும் மனித இனத்திற்கு, தன் உயிரை துறந்து, நெஞ்சைப்பிளந்து பனஞ்சோறு தந்து, தமிழர் பரம்பரையை பாதுகாத்து பசுமையை பார்க்க செய்த மரம் பனைமரம்.

பனைமரப் பாகங்களின் பயன்பாடுகள்:

இது பனைமரம் மட்டுமல்ல; நமது பாரம்பரியப் பார்வையில் பயன்மரம். ஏனெனில், அடி முதல் நுனிவரை அனைத்தும் பயன்தருவதால், இன்றைய நவீனப் பார்வையில் இது பண மரம். யானையைப் போல், பனை இருந்தாலும் ஆயிரம் பொன்! வீழ்ந்தாலும் ஆயிரம் பொன்!”. “பனை மரத்துல அப்படி என்ன விசேஷம்…? பனைவெல்லம், பனங்கற்கண்டு, நுங்கு, பதநீர் இவ்வளவு தானே….!” என்றால் அது நம் அறியாமை. பனைமரத்துல 801-விதமான பொருட்கள், பலன்கள் கிடைக்குதுன்னு அன்றே பட்டியல் போட்டிருக்கார் திருக்குடந்தை அருணாச்சலபுலவர், ‘தலாவிருட்சம்என்ற நூலில்!

பிரபல சமூகவியல் ஆய்வறிஞர். .சிவசுப்பிரமணியன்பனைமரமே பனைமரமேஎன்ற நூலில் பனையின் உச்சித் தொடங்கி பாதம் வரை, ‘என்னென்ன பகுதிகள், என்னென்ன பலன்கள்என சுருக்கமாக தந்துள்ளார்.

 

 1. குருத்தோலை : தோரணங்கள் மற்றும் அழகுசாதனப்பொருட்கள்.
 2. சாரை ஓலை : கூடை, பெட்டி, பாய் மற்றும் கைவினைப்பொருட்கள்.
 3. பச்சைமட்டைவேலி, நார், முறம், செருப்பு மற்றும் காய்ந்த பின்பு எரிப்பொருள்.
 4. பனங்காய்நுங்கு, பனம்பழம் மற்றும் பனங்கிழங்கு.
 5. பனை ஈர்க்குசொளகு, இடியாப்பதட்டு மற்றும் திருகணை.
 6. பாளைபதநீர், கள், பனைவெல்லம் மற்றும் கற்கண்டு.
 7. சில்லாட்டை : பன்னாடை, எரிபொருள் மற்றும் துடைப்பம்.
 8. ஓலை :    கூரைவேய, மீன்பிடிவலை செய்ய, பதநீர், கஞ்சியை ஊற்றி குடிக்க, நிலத்தில் உவர்தன்மை நீக்கும் உரமாக, ஈர்க்கு எடுக்க மற்றும் கலைப்பொருட்கள் செய்ய பயன்படுகிறது.
 9. உச்சிகொண்டை பகுதி : மரத்தொட்டி செய்ய, பாசன குளங்களில் மடையாக  பயன்படுகிறது.  
 1. பத்தைமட்டை : தட்டி அடிக்க, தரைதேய்க்கும் பிரஷ்ஷாக பயன்படுகிறது.
 2. நடுமரம்  :   வீடுகட்டும் விட்டமாக, உத்திரமாக ஏற்றம் அமைக்க, மாட்டுவண்டிகட்ட.
 3. அடிமரம் : வட்ட வடிவிலான நீர்தொட்டி.

 

பல போர்கள் கண்ட பனைமரம்:

முற்காலத்தில், போர் என்று வந்து விட்டால் இராணுவ தடவாளங்களை அமைக்க காலாட்படை, யானைப்படை மற்றும் குதிரைப்படை ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக படையெடுத்து செல்வது மரபு. அவற்றிற்கு காரணங்களும் உண்டு. அதில் ஒன்று போர் யுக்திகளை செயல்படுத்தவும், மற்றொன்று உணவு, தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கவும் இவ்வாறு படைகள் செயல்பட்டது. இதில், பனைமரங்கள் இராணுவ தடவாளங்களை அமைக்கவும், படைகள் நீர் ஆதாரங்களை கடந்துச் செல்ல சிறு சிறுப் பாலங்கள் அமைக்கவும், எதிரி நாட்டு சுற்று மதில்களை உடைக்கும் பெரிய கவன் போன்றவை அமைக்கவும், தண்ணீர் சேமிக்கும் பெரிய தொட்டிகள் அமைக்கவும் பயன்படுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி, முன் செல்லும் படை வீரர்களின் பசித்தாகத்திற்கு பனைமரம் நுங்கு கொடுத்தது. அடுத்து செல்லும் படைக்கு பனைமரம் பனங்காய் கொடுத்து பசியாற்றியது. பின் செல்லும் படைகளுக்கு பனங்கிழங்கு கொடுத்து ஒரு வருடம் வரை நடக்கும் போர்களை கூட மேற்கூறிய அத்தியாவசியங்களின், அவசியத்தை பூர்த்தி செய்தது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக வெற்றியை, பாடுபட்டவர்களின் வசம் சேர்த்து வரலாற்றைப் படைக்க உதவி செய்தவை இந்த பனைமரம்.

      

இலக்கியம் வளர்த்த பனைமரம்:

சங்க இலக்கியங்களும், ஐம்பெருங் காப்பியங்களும், தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களும், திருக்குறள் ஈறாக நாம் பெற்ற அனைத்து, தமிழ்ச் செல்வங்களும் பனைமர ஓலைச்சுவடிகளினால் தான் நமக்கு கிடைத்தன. பனை இல்லையேல் நமக்கு மொழியில்லை, வரலாறில்லை, ஏன் பாரம்பரியமே இல்லை, என்பதை உணரும்போது மெய்சிலிர்க்கிறது. அதற்கேற்ப, சங்க காலப்புலவர்கள் தங்களின் இலக்கண நடை வாரத்தைகளை இலக்கிய நூட்களாக உயிர் பெறச் செய்த பனையின் துணையை தரணி அறியச் செய்தார்கள். அவற்றில் சில,

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்” என்றும்,

பனைமரமத்தை ‘பயன்மரம் என்றும் திருக்குறளில், திருவள்ளுவர் சிறப்படைய செய்துள்ளார். மேலும், தொல்காப்பியம் போன்ற சில நூல்கள் பனைமரத்தை கற்பகதகு என்றும், அச்சயப்பாத்திரம் என்றும், பாராட்டியுள்ளது. சில நூல்கள் ‘தலவிருச்சமாகவும், பல கோயில்களில் இன்றும் கொண்டாடப்பட்டு வருவதற்கு சான்று அளித்துள்ளது.

அதுமட்டுமின்றி, காதல் தூது, படைவிடு தூது, அபாயத் தூது என்று பண்டைய கால தபால்துறையும், டெலிகம்யூனிகேஷனும் பனைமரங்களையே நம்பி இருந்தன என்றால் அது மிகை ஆகாது.

 

கட்டுமானங்களின் கட்டமைப்பு பனைமரம்:

      தன்னை வெட்டி வீழ்த்தி நெஞ்சைப் பிளந்தாலும், ஊருக்கே நிழல் தரும் மரம்; தமிழர் பரம்பரைக்கே குடில் தந்த மரம், பனைமரம். பச்சை மட்டைய பதமாக்கி கட்டி வச்ச, ஆட்டுப்பட்டி போகும் ஊரெல்லாம் கூடவரும் குடிசையாகவும், ஆடித்திரியும் ஆட்டுக்குட்டிக்கெல்லாம் தாய்வைத்து மடியாகவும் அடைக்கலம் தரும் மரம், பனைமரம். அத்துவான பொட்டல் காட்டுல வெயிலடிச்சா நிழலாகவும், அடமழ புடிச்ச குடையாகவும் சமங்கூடு  தரும் மரம், பனைமரம். தன்னை வெட்டி கடலில் தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாகவும், பாய்மரக் கப்பலாகவும், மிதந்து பயணிப்போரை கடலில் கவிழ்த்து விடாமல் கரை சேர்க்கும் மரம், பனைமரம்.

கடலில் ஏலேலோ ஐய்லேசா, அயிர மீனு ஐய்லேசா, இழுத்து புடி ஐய்லேசா என்று பாடிக்கொண்டு மீன் பிடிக்கும் மீனவனுக்கு மீன் வலையை பனைநார்களால் தந்த மரம், பனைமரம். இப்படி, பனைமர ஓலைகளில் செய்யப்படும் பொருட்களை பட்டியலிட்டாலே அவை 100 ஐ கடக்கும். இதையும் கடந்து நிறைய சொல்லலாம். அந்த காலத்தில் அரிசி மற்றும் தானியங்களை இடிக்கும் உலக்கை பனை மரத்திலிருந்து செய்யப்பட்டதே! கப்பல் கட்டவும், பாலங்கள் அமைக்கவும் பனைமரங்கள் பயன்படுகின்றன.

 

விவசாயத்துடன் ஒட்டிப்பிறந்த இரட்டைப்பிறவி இந்த பனைமரம்:

      உழுத களைப்புல, உச்சி வெயிலுல, கூழ் குடிக்க ஆச வந்த பனை ஓலை மட்டகிழிச்சி, பக்குவமா நரம்பொடச்சி படகு போல தொன்ன செய்து பச்ச மிளகா கடிச்சி கூழ் வார்த்து குடுச்சா பஞ்சாமிர்தம் போலிருக்கும். அது பாயாசம் சுவை தரும் என்று ஊருக்குள்ள இன்னமும் பேச்சு. உண்மைதான்! விவசாய சங்கத் தலைவர் ஈரோடு நல்லசாமி ஒரு முறை சொன்னார், "அந்த காலத்துல விவசாயிகள் 90% பேருக்கு பனைமரம் ஏறுவது அத்துப்படியாயிருந்தது. அப்புறம் அதுக்கான ஆட்கள்னு உருவானார்கள். பிறகு பனைமரம் ஏறுவது கேவலமாக பார்த்த காலம் உருவானது. இப்ப அதுக்கும் ஆளில்லாமல் போனதால் எதுக்கும் பயன் இல்லாமல் பனை மரத்தை பட்டுப்போக விட்டுடறாங்க..” என்று. உலகத்திலேயே அதிக பனை மரங்களைக் கொண்ட பூமி தமிழ் மண் தான்! இன்றைக்கு 100 க்கு மேற்பட்ட நாடுகளில் பனைமரங்கள் உள்ளன. ஏனெனில், இது ஆதிகாலத்து தாவரம். இதன் பூர்வீகம் தமிழகம். இதை தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலெல்லாம் நட்டு வைத்து பரவலாக்கி பிரபலப்படுத்தினர்.

     இன்னும் கொஞ்சம் விவரமாக இன்றைய நவீன விஞ்ஞானப் பார்வையில் பனையை ஆராய்ந்தால் இதில் ஆயிரம் பலன்களை அனுபவிக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனால், என்ன செய்வது? உள்ள பலன்களையே நமக்கு அனுபவிக்க பிராப்தமில்லை. ஏனெனில், பனையை அனுபவிக்க ஒரு பாரம்பரிய விவசாயத் தொழில் சார்ந்த அறிவு மற்றும் அனுபவத் தொடர்ச்சி வேண்டும். அதற்கு நாம் முதலில் பனையேறிகளை காப்பாற்றி, இந்த கலையை அடுத்த தலைமுறைக்கு பயிற்றுவிக்க வேண்டும்.

இந்த தெளிவு இன்று இயற்கை விவசாயம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் முதலில் பனைமரத்திற்கும், பனையேறிகளுக்கம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதை எப்படி செய்வது என்று கேட்கிறீர்களா? செயற்கை நீர்நிலைகளை விவசாய நிலங்கள் அருகில் அமைத்து அதன் கரைகளில் பனைமரங்களை வளர்க்க வேண்டும். நீங்கள் அப்படி வளர்க்கும் ஒவ்வொரு பனையும் அப்பகுதில் மழை பொழிவிற்கு துணை செய்யும். அதனால் தான் தன் கடைசி நாட்களில் நம்மாழ்வார் பனை மர மீட்புக்கென்றே பாடுபட்டார். “பனைகாக்க நெடும் பயணம்என அவர் கிராமம், கிராமமாக பலர் சூழச்சென்று பரப்புரை செய்தார்.

 

பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும்

பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும்”

என்பதே அன்று நம்மாழ்வார் தலைமையில் திரண்ட விவசாயிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வைத்த முழக்கம். ஒரு காலத்தில் நாம் பனை மரத்தால் பெற்ற பலன்களை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.

 

பொருளாதாரத்தில் அச்சயப்பாத்திரம் இந்த பனைமரம்:

    அழகான பனை விசிறி கொடுத்து, படுக்க பாய் கொடுத்து, குட்டி முறம் கொடுத்து, பல விதமான பனைப் பெட்டி கொடுத்து, தினுசு தினுசா கூடை கொடுத்து, அடுக்கடுக்கா தொப்பி கொடுத்து வெளிநாட்டு வியாபாரத்தால் அன்னியசெலவானியை அரசாங்கத்துக்கு தந்த பணமரம் இந்த பனைமரம்.

சுதந்திரம் பெற்றபோது அன்றைய பரந்து விரிந்த தென்னகத்தில் சுமார் 30 கோடி பனைமரங்கள் இருந்தன. இன்றைய தமிழகத்தில் அதிகபட்சம் மூன்றரைக் கோடி இருக்கலாம் என நம்பப்படுகிறது. அன்றைக்கு பனைமரம் பல லட்சம் விவசாயிகளுக்கும், விவசாயக் கூலிகளுக்கும், பல லட்சம் அற்புதமான கைவினை கலைஞர்களுக்கும் வாழ்வு தந்தன. ஏன் மன்னர்கள் பலரும், ஆங்கிலேயர்களும் இதன் வருமானத்தில் வரி வாங்கி ஆட்சி செய்துள்ளனர். நெடுங்காலமாக நம் முன்னோர் பருகிய பானங்கள் அனைத்தும் பனைவெல்ல சுவையன்றி வேறல்ல! – காபி, தேநீர் உட்பட பனைவெல்லம் சேர்த்தே பருகப்பட்டன. அன்று வெள்ளைச்சீனி கிலோ 6 ரூபாய்க்கு விற்ற காலத்தில் பனைவெல்லம் கிலோ 3 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால், இன்று பனைவெல்லம் அரிதாகி விட்டதால் ரூபாய் 300 தந்து வாங்க வேண்டியதாகிவிட்டது.

பனையின் பெருமைகளை எழுத பக்கங்கள் போதாது என்றேன் அல்லவா? அதனால், பின் வரும் தலைப்புகளில் பனையின் சிறப்புகளை அடுத்தப் பதிப்பில் காண்போம். 

உலக அளவில் பனை வளர்ப்பு..

ஈழப்போரில் (இலங்கை) பனையின் தியாகம்..

பனைமரம் அழிக்கப்பட்டு வருவதற்கான அரசியல் காரணம்....

தற்சார்பு பொருளாதாரத்தை உயர்த்தும் பனைமரம்...

“பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும்

பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும்”

What's Your Reaction?

like
4
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
2