தமிழ்நாட்டு நாய் இனங்கள் பகுதி - 2

பூமியில் மனித இனத்திற்கு காவலாளியாக, உற்ற நண்பனாக, ஏன் குடும்பத்தில் ஒரு நபராகவும் கூட வளர்க்கப்பட்டு வருபவை நாயினங்கள். இன்றும், உலகில் நன்றி மற்றும் விசுவாசத்திற்கு ஒரு உருவம் கொடுக்கவேண்டும் என்றால் அதற்கு நாயினங்கள்தான் முதலில் ஞாபகம் வருகின்றன. இதற்கு சான்று, பண்டைய தமிழனால் நாகரிகப் புகழ் கருதி வளர்க்கப்பட்ட வீட்டு விலங்கினங்களான காளைமாடு, ஆட்டுக்கடா, பந்தைய குதிரை, சண்டைக்கோழி போன்றவற்றை விடவும் சற்று அதிகமாக, அவர்கள் வளர்த்த நாயினங்கள் நன்றி, விசுவாசத்தில் பெயரெடுத்து இருந்தன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் (கொரோனா ) நாய்களை பற்றிய இப்பதிவுகளுக்கு, இந்த ஆண்டு 2020-ல் இணையத்தில் வெளியாகி நாய் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நாய்களை பற்றிய “தி கால் ஆப் தி வைல்டு” (“The call of the wild”) என்ற ஆங்கிலத் திரைப்படம் ஒரு காரணம் என்றும் கூறலாம். மேலும், தமிழ்நாட்டு நாயினங்கள் பற்றிய பகுதி-1ன் தொடர்ச்சியை இப்பதிப்பில் காண்போம்.

தமிழ்நாட்டு நாய் இனங்கள் பகுதி - 2

பூமியில் நாயினங்களின் வரலாற்றை முதலில் பார்ப்போம் வாருங்கள். நாய்கள் 10,000 ஆண்டுகளுக்கு முன்னமே தோன்றிய இனங்களாகும். இவை, ஆசியா, யூரோப், நார்த் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளில் மிகவும் பழமையான மற்றும் அழிந்துபோனதாக கண்டுப்பிடிக்கப்பட்ட “ஜீனோ சையான்” என்ற ஓநாய் இனத்தின் வம்சவழிகளாகும். அவைகள் முறையே ‘செந்நாய்கள்’, ‘ஆப்பரிக்கன் காட்டு நாய்கள்’, ‘ஆக்ரோஷமான பெரிய மாஸ்டிவ்’ வகை நாய்களாகும்.  இப்போது அவைகள் உலகெங்கிலும்  பரிணாம வளர்ச்சி மற்றும் கலப்பினம் அடைந்து பலதரப்பட்ட நாயினங்களாக உள்ளன. இவையே, நாய்களைப் பற்றிய சுருக்கமான வரலாறு. இதுபோன்று, முன்கூறிய திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திர நாயின் (Buck)  அசாதாரண செயல்களில் இந்த ஜீனோ சையான் என்ற ஓநாயின் வழிகாட்டுதல் இருப்பது போன்றும், நாய்கள் மனிதர்களால் அஞ்சல் துறையில் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்றும் பல காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளது. நாய்களின் வரலாற்று சிறப்புகள் மிக முக்கியம்.  இங்கு, குறிப்பிடப்பட்டது சில துளிகள்தான். நீங்கள் இப்பதிப்பில் நாயினத்தின் இச்சிறப்பும் இடம் பெற்றிருக்கலாம் என்ற உங்கள் தகவல்கள் மற்றும் உங்கள் நாய் வளர்ப்பின் அனுபவங்களையும் கருத்துக்களையும் கீழே குறிப்பிடுங்கள். அவைகள் மற்றவர்களுக்கும், எங்களுக்கும்  கூடுதல் தகவல்களாக இருக்கும்.

முதல் பதிப்பில் கீழ்கொடுக்கப்பட்டுள்ள நாயினங்களில் முதல் ஐந்தை பார்த்தோம். இப்பதிப்பில் மற்றவற்றைக் காண்போம். உலக நாயினங்கள் எப்படி தோன்றின என்ற வரலாற்றை முன்னுரையில் பார்த்தோம். தமிழக நாயினங்களை கீழ் கண்டவாறு வரிசைப்படுத்தியதற்கான காரணம் உலக நாயினங்கள் இரண்டு சிறப்பம்சகள் கொண்டவைகளாக இருப்பதால் தான். அவைகள் என்னவென்றால் அதிக மோப்பதிறன் மிதமான பார்வைதிறன் மற்றும் அதிக பார்வைதிறன் மிதமான மோப்பதிறன்.  அதையும் அழிந்த இனம், அழியும் தருவாயில் உள்ள இனம் என்றும் பிரிக்கலாம். பகுதி-1ல் அதிக மோப்பதிறன் கொண்டவை என்ற அடிப்படையில் பார்த்தோம். பகுதி - 2ல் அதிக பார்வைதிறன் கொண்டவை என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக காண்போம்.

நாய் வகைகள்:

  1. அலங்கு நாய்
  2. செங்கோட்டு நாய்
  3. கோம்பை நாய்
  4. ராமநாதபுரம் மண்டை நாய்
  5. கட்டைகால் நாய்
  6. மலையேறி நாய்
  7. கொச்சி நாய்
  8. கன்னி நாய்
  9. சிப்பி பாறை நாய்
  10. ராஜபாளையம் நாய்
  11. சொனங்கி நாய்

முதல் பதிப்பின்  தொடர்ச்சி........

  1. மலையேறி நாய்

   

இவைகள் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் அதிகம் வளர்க்கப்பட்டு வந்த நாயினங்களாகும். இவைகள் பட்டி என்றும், மலைப்பட்டி என்றும் அழைக்கப்பட்டு வந்தன. ஏனென்றால், மலை வாழ் மக்கள் மலை பகுதிகளில் மட்டும் வாழ்ந்தார்கள். அவர்கள் அத்தியாவசிய  சந்தை பொருட்களை வாங்க மலையை விட்டு கீழிறங்க வேண்டும் என்றாலோ அல்லது குடிபெயர்ந்து வேறு மலைக்கு செல்ல வேண்டும் என்றாலோ அவர்களையும், அவர்களின் பட்டிகளையும் பாதுகாப்பான இடம் சேர்ப்பதில் இன்றியமையாத பங்குடைய நாயினம் என்றால் அது இந்ட்ஜுத மலையேறி நாயினம் தான். இன்றும், இவைகள் மலை வாழ் கிராமங்களான செங்கல்வராயன் மலை, கொல்லிமலை போன்ற பகுதிகளிலும், கேரள சபரி மலை பகுதிகளிலும் காணப்படுகிறது. இவ்வாறு மலை வாழ் மக்களின் விவசாயம் மற்றும் கால்நடை பட்டிகளை பாதுகாப்பது, மலைப் பகுதி போக்குவரத்திற்கு உதவுவது, அத்தியாவசிய  சந்தை பொருட்களை மலை மேல் சுமந்து வருவது, போன்ற பல வேலைகளை செய்கிறது.

பெயர் காரணம்:

     மலை மற்றும் மலை சார்ந்த பகுதியில் வாழ்ந்ததால் இவை மலையேறி நாய் என அழைக்கப்பட்டது. பட்டி நாய் மற்றும் மலைப்பட்டி என அழைக்கப்பட காரணம் கால்நடைப் பட்டிகளை பாதுகாத்து வந்ததால்தான். கேரளாவில் நாய்களை பட்டி என்று அழைக்கப்பட காரணமும் இவ்வேலைகளுக்காக நாய்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன என்பதால் தான் என்பது குறிப்பிட தகுந்தது.

சிறப்பு:

   தமிழக நாயினங்களில் பொதி சுமக்கும் நாயினமாக மலையேறி நாய்கள் கருதப்படுகிறது. இவை மலைப்பகுதியில் மட்டும் வாழும் தகவமைப்பை பெற்ற நாயினங்களாகும். மேலும் இவை அபரிவிதமான பார்வைதிறன் கொண்டவைகளாகும். இவ்வகை நாய்கள் மலைப்பகுதியில் மிதமான வேகத்தில் ஓடும் திறன் பெற்றவையாகும்.

தோற்றம்:

    இவை குத்து காதுகள் கொண்டவைகளாக காணப்படுகிறது. பெரிய, வலுவான பாதங்களையும், மலை பகுதியில் ஏற வளைந்த நகங்களையும் கொண்டவை. இவைகள் கட்டான மார்பு மற்றும் உடல் பகுதிகளையும், வலிமையான பின்னங்கால்களையும், சுருண்ட வால் பகுதியையும் கொண்டவைகளாகும். இவை 22”(inch)  முதல் 27” (inch) உயரம் வரையும் வளரக்கூடியவைைகள். இவைகள் 35 கிலோ வரை எடை உடையனவாகும். சராசரியாக 15 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. உருவமைப்பில் சற்று, டாபர் மேன் நாய்களின் தோற்றம் போன்று மலையேறி நாயினங்களின் தோற்றமும் இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

நிறம்:

உடல் பகுதி முழுவதும் கறுப்பு நிறம் சூழ்ந்திருக்கும். கண் மற்றும் மூக்கு பகுதியின் மேல் வெள்ளை அல்லது செம்பழுப்பு நிறம் கொண்டவை..

               

  1. கொச்சி நாய்

   

தமிழக தென்மாவட்டங்களில் பரவலாக காணப்படும் நாயினம். ஆட்டுப்பட்டி காவல் மற்றும் ஆடு மேச்சல் வேலையை சிறப்பாக செய்து வரும் நாயினம் கொச்சி நாய்கள் ஆகும். முயல், பூனை வேட்டையிலும், வீட்டுக்காவலிலும் சிறந்து விளங்குகிறது. பொதுவாக நாய்கள் தங்கள் நாக்கை வெளியில் நீட்டிக்கொண்டுதான் இருக்கும் ஆனால், இந்நாயின் இச்செயல் மற்ற தமிழக நாய்களுடன் ஒப்பிடும் போது வித்தியசமாகவும், நீண்டநேரமாகவும் தன் நாக்கை சற்று நீளமாக வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் தன்மை கொண்டவையாக இருக்கிறது. இதற்கு, வறண்ட பகுதிகளிலும் வெகு தொலைவான ஆடு மேச்சல் பணியில் தண்ணீர் இல்லாமல் வேலை செய்து வருவதும் ஒரு காரணமாக இருக்கலாம். இவற்றின், வித்தியாசமாக குறைக்கும் ஆற்றலால் வளர்ப்போருக்கு எதிரில் இருக்கும் மிருகத்தின் ஆபத்து தன்மையை எச்சரிக்கும் திறன் கொண்டவை.

பெயர் காரணம்:

     கேரள-தமிழக எல்லைப் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டதால் இப்பெயர் வழங்கப்படலாம் என்ற ஒரு ஐயப்பாடு (யூகம்) இருக்கிறது.

சிறப்பு:

     கொச்சி நாய்கள் சாதரணமாக நல்ல உடல் வாகை கொண்டவை. ஆனால், சிறந்த பார்வைத்திறன் மற்றும் கேட்கும் திறன் கொண்டவை. அதிக நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்ட நாயினம் எடுத்துகாட்டாக இதன் உடலில் ஏதேனும் ஆழமான காயங்கள் ஏற்பட்டாலும் தன் நாக்கால் நக்கியே அவற்றை குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டவை.

தோற்றம்:

     குத்து காதுகளுடன் சிறிய மண்டைப்பகுதியை கொண்டது. நீண்ட நாக்குப்பகுதியை கொண்டது. சிறிய பலப்பலபான ரோமங்கள் உடல் முழுவதும் கொண்டதுள்ளது. அதிக பச்சம் உயரம் 24.5” (inch) வரை வளரும். எடை 28 கிலோ முதல் 32 கிலோ வரை வளரக்கூடியது.  

நிறம்:

     கருப்பு, பழுப்பு, சிவப்பு போன்ற பல நிறங்களில் காணப்பட்டாலும் இந்நாயின் உடல் பகுதியின் கீழ் புறத்தில் வெள்ளை நிறம் கொண்டு காணப்படுகிறது.

  1. கன்னி நாய்

     

     

தூத்துக்குடி, திருநெல்வெலி, மதுரை மாவட்டங்களில் பரவலாக காணப்பட்டு வந்தவை  இனம். வேட்டையின நாய்களான ராம்பூர் ஹொன்ட், முத்தோல் ஹொன்ட், கேரேடன், கேரன் ஹொன்ட் போன்ற இந்திய நாய்களுடன் ஒப்பிடும் அளவிற்கு ஒத்த வடிவம் கொண்டவை. அதுமட்டும் இல்லாமல், இந்நாயினம் ஆப்ரிக்க நாயினமான சலிக்கி நாய்களுடனும் ஒப்பிடப்படுகிறது. சலிக்கி நாய்கள் ஆப்ரிக்கச் சிறுத்தையின் உடல் வாகை பெற்றவை என்பது குறிப்பிட தகுந்தது.

குட்டிகள் வாங்கும் பொது கவனிக்க வேண்டியவை

    இந்த குட்டிகள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கிடைக்கின்றது. இந்த குட்டிகளை வாங்க நினைப்பர்வர்கள் முதலில் இதற்கு சரியான இட வசதி இருந்தால் மட்டும் வாங்க வேண்டும். என்றென்றால் இவை வேட்டை நாய்கள் கட்டி போட்டு வளர்தல் கூடாது. அதற்கான இட வசதி மற்றும் சுகந்திரம் தேவை. கன்னி நாய் குட்டிகள் வாங்குவர் முடித்தால் 2 குட்டிகளாக வாங்கவும் இல்லை என்றால் ஒரு குட்டி மட்டும் தான் வாங்க முடியும் என்று எண்ணுபவர்கள் ஒரு தெரு நாய் குட்டியை எடுத்து இரண்டையும் ஒன்றாக வளர்க்கவும். இந்த கன்னி நாய்களை வியாபாரத்திற்காக கேரவன் ஹவுண்ட் உடன் இனப்பெருக்கம் செய்து  அதிகமான உயரம் உடைய நாய்களாக உருமாற்றி  வியாபாரம் செய்கின்றனர். இதை மனதில் வைத்து கொண்டு வாங்கவும். தோற்றத்திற்காக அதன் இயற்கையை அழிக்க நினைக்கின்றனர். முதலில் கேரவன் ஹவுண்ட் எது? கன்னி எது? என்று தெரிந்து கொண்டு வளர்ப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு,  இந்நாய்களை வாங்க விற்போரை அணுகவும்.

பெயர் காரணம்:

                கன்னி என்று அழைக்கப்பட காரணம் தமிழகத்தில் காணப்பட்ட கன்னி என்ற ஆட்டு இனத்தின் போலவே நிறஅமைப்பை பெற்றிருந்ததாலும், தென்தமிழகத்தில் முற்காலத்தில் பெண் வீட்டு திருமண சீராக கொடுக்கப்பட்டு வந்தாலும் கன்னி என்று இப்பெயர் பெற்றது.

சிறப்பு:

     துத்துக்குடி, திருநெல்வெலி, மதுரை மாவட்டங்களில் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு திருமண சீர் செய்வர். அதாலேயே இந்த பெயர் வந்ததாக கூறுகின்றனர்.  மேலும், பைரவர் என்ற கிரகத்தின் வாகனம் கன்னி நாயினத்தின் உருவத்தை ஒத்திருக்கும் சிறப்பைப் பெற்றுள்ளது.  

தோற்றம்:

              உடல் பகுதியை முழுவதும் கறுப்பு நிறம் சூழ்ந்திருக்கும். கண்கள் 280 degree கோண அளவை கூடப்பார்க்கும் அளவிற்கு மண்டைப்பகுதியில் அமைந்துள்ளது. காது மடல் சற்று மடிந்தும், குத்து காது கொண்டவைகளாக காணப்படுகிறது. முக்கு  பகுதி டீ கிளாசில் நுழையும் அளவிற்கு கூர்மையானது. ஆனால், வலுவான தாடைப்பகுதிகளை கொண்டது, பெரிய மார்பு பகுதிகள், வயிற்றுப்பகுதி உடலுடன் ஒட்டி ஆப்ரிக்கச் சிறுத்தையின் தோற்றத்தில் காணப்படுகிறது. வலிமையான பின்னங்கால்களையும், சுருண்ட மெல்லிய நீண்ட முடிச்சுகள் வால் பகுதியை கொண்டது. உயரம் 28”(inch)  முதல் 29” (inch) வரையும் வளரகூடியது. எடை 30 கிலோ முதல் 35 கிலோ வரை காணப்படுகிறது. ஆயுட்காலம் 13 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.

நிறம்:

கருப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் வெள்ளை, செந்நிறம் கலந்துக் காணப்படுகிறது.

சாம்பல் கன்னி

(Ash Color)

பால்கன்னி

(Full Black & White patches Color)

கருங்கன்னி

(Black Color )

செங்கன்னி

(Full Black & Red patches Color)

கரம்பை

(Black and Ash Color mix)

​9. சிப்பிப்பாறை

       

 

தமிழகத்தின் வேட்டைக்கு புகழ் பெற்ற இனமான சிப்பிப்பாறை நாய்களின் பிறப்பிடம் சிப்பிப்பாறை. பலர் கன்னி நாய் மற்றும் சிப்பிப்பாறை நாய் வேறு வேறு இனங்கள் அல்ல இரண்டும் ஒரே இனங்களே என்று கூறுகின்றனர் அது உண்மையே.  ஆனபோதும், தமிழகத்தில் நிறத்தின் அடிப்படையில் தாங்கள் வளர்க்கும் விலங்குகளை வகைப்பிரித்தனர். அவ்வாறே, உருவமைப்பிலும், குணத்திலும் ஒன்றான கன்னி மற்றும் சிப்பிப்பாறை தனித்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், இங்கு சிப்பிப்பாறையின் உடலமைப்பு மற்றும் எடை  கன்னி நாயுடன் ஒப்பிடப்படுகிறது. கன்னி நாய்கள், கருப்பு நிறம் அதிகமாகவும், சற்று குறைவாக மற்ற நிறம் கலந்து இருக்கும். அதை வைத்து அதனை கன்னி என்றும் கீழ்கொடுக்கப்பட்ட நிற நாய்களை சிப்பிப்பாறை என்றும் அடையாளம் காண்பர்.

நிறம்:

 வெள்ளை, பழுப்பு, சந்தனநிறம், சிவப்பு போன்ற பல வண்ணங்களில் சிப்பிப்பாறை நாய்களை நெத்தி நாமம் பூ வால், பருக்கி, பிள்ளை, கீரிப்பிள்ளை, சந்தனபிள்ளை  ஆகிய பெயரில் கிடைக்கின்றது.

  

பால்பருக்கி

(Black & White  patches welled mix)

செம்மரை

(Red & White patches)

சந்தானப் பிள்ளை

(Fawn Color)

மயிலை பிள்ளை

(White Color)

கரும்செவலை

(Red Color)

செவலை

(Tan & White)

 

  1. ராஜபாளையம்

தமிழ்நாட்டு  நாய் என்ற உடனே அனைவரின் மனதிலும் முதலில் தோன்றுவது ராஜபாளையம் நாய்களே. ஆம் இன்றளவும் தமிழ்நாட்டின்  அடையாளமாக இருப்பது ராஜபாளையம் நாய்களே. இவை மூர்க்கமான காவல்கார நாயினம், வளர்த்தவர்களிடம் பாசமாவாவும், புதியவர்களிடம் கோபமாகவும் நடந்து கொள்ளும் பொலிகர் நாயினத்தில் முதன்மையானவை.

பகுதி-1லும் இந்த ‘ பொலிகர் ’ என்ற வார்த்தை பதிவிடப்பட்டுள்ளதை உங்களில் எத்தனை பேர் கவனித்தீர்கள்? இது ஆங்கிலேயர்கள் இந்தியா மீது படையெடுக்கும் போது தமிழகத்தை ஆண்ட 72 பாளையகாரர்களுக்கு ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட சிறப்பு பெயர் ஆகும். அப்பாளையகாரர்களால் (பொலிகர்) வளர்க்கப்பட்டு போர்களில் பயன்படுத்தப்பட்ட நாய்களுக்கும் பொலிகர் நாய்கள் என்ற அப்பெயரே ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்டது. இதற்கும் அதிகப்படியான கவனிப்புகள் தேவை ஆனால் நாம் காக்க வேண்டியது ராஜபாளையம் நாய்களை மட்டும் அல்ல.

குட்டிகள் வாங்கும் பொது கவனிக்க வேண்டியவை:

ராஜபாளையம் குட்டிகள் நமது நாட்டு இனத்திலேயே விலை அதிகமானவை அதனால் ஒன்றுக்கு இரண்டு முறை கவனமாக பார்த்து விட்டு குட்டிக்கு காது நன்றாக கேட்க்கின்றதா?  என்பதை தெரிந்து கொண்டு பின்னர் வாங்கச் செய்யுங்கள். முடித்த வரை நேரில் சென்று குட்டிகளை மற்றும் தாய் தந்தை இனப்பெருக்கம் செய்த புகைப்படம் அனைத்தையும் பார்த்து விட்டு வாங்குங்கள் குளிர் மற்றும் மழை காலங்களில் இந்த குட்டி வாங்காமல் இருப்பது நல்லது அப்படி தெரியாமல் வாங்கிவிட்டர்கள் என்றால் அதிக கவனம் வேண்டும். இன்றைய மதிப்பில் ஒரு குட்டி 5௦,௦௦௦ ரூபாய் வரை விற்கப்படுகின்றது.

பெயர் காரணம்:

     விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் என்ற பகுதியில் முதன் முதலில் தோன்றியதால் ராஜபாளையம் என்ற அந்த ஊரின் பெயரையே இந்நாய்களுக்கும் வைத்து இன்று உலகம் முழுவதும் பிரபலம்

சிறப்பு:

  ராஜபாளையம் நாய்கள் ஆங்கிலேயர்களின் குதிரைப்படையை பல போர்களத்தில் வீழ்த்தி வெற்றியை இந்திய மன்னர்களுக்கு பறைசாற்றியதால் இதற்கு, நினைவுச் சின்னமாக இந்திய அரசாங்கம் ராஜபாளையம் நாய்களின் உருவத்தை தபால் தலைகளில் பதித்து வெளியிட்டது.

தோற்றம்:

      ராஜபாளையம் வகை நாய்கள் வெண்ணிறத்தில் பழுப்பு நிற புள்ளிகளுடன் உயர்ந்து மெலிந்ததாக இருக்கும். இதன் தலையில் மேல்பாகம் சிறிது குவிந்திருக்கும். தலை கூடுதல் பகுதியில் தோல் சுருக்கம் தென்படும். இதன் நுனி மூக்கும் வாயும் பாதங்களிலும்  இளம்சிவப்பு நிறம் காணப்படுகிறது. இந்த இனம் முன்னாளில் பல மயிலை வண்ணங்களிலும் இருந்தது. அனால், இப்பொழுது ஒரே நிறத்தில் மட்டுமே உள்ளது வியாபாரத்திற்காக ஒரே நிறம் உள்ள நாய்களும் மட்டும் இனப்பெருக்கம் செய்து மற்ற நிற நாய்களை அழித்து விட்டனர்.

நிறம்:

          தற்போது உள்ள ராஜபாளையம் நாய்கள் வெள்ளை மற்றும் இளம்சிவப்பு மூக்குடன் இருக்கின்றன். இவை அல்பினோ வகையை சேர்ந்தது .இந்த வகை  நாய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

  1. சொனங்கி

     இந்நாயினங்கள்மற்றும் தமிழ்நாட்டு எல்லைப்பகுதியில் காணப்படுகிறது. ஆஸ்துமா, அலர்ஜி காரணமாக சிலர்கள் நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் இருந்தாலும் அவற்றின் மேல் இருக்கும் ரோமம் அவர்களுக்கு மூச்சில் சிரமத்தை ஏற்படுத்துவதால் நாய்கள் வளர்க்கும் தங்கள் ஆசைகளை கைவிடுகின்றனர். இது போன்ற பிரச்சனை உடைய முன்னால் அமெரிக்க அதிபரின் மகளுக்கு கால்நடை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட நாயினம் சோலோ (Solo the Mexican heirless dog) ஆகும். இது போன்று தமிழக நாட்டு நாய்களில் முடியில்லா வழு வழுப்பான தோல் பகுதிகளை கொண்டவை இந்த சொனங்கி நாய்கள்.

 

சிறப்பு:

        இந்நாயினம், நீர் நிலைகளில் அதிகம் நேரம் வாத்து மேய்க்கும் பணியில் ஈடுபடுவதால் இது ரோமங்கள் அற்று காணப்படும் சிறப்பு தோற்றத்தை பெற்றுள்ளது. சிறப்பாக, மீன் வேட்டையாடும் நாயினம்.

 தோற்றம்:

     சொனங்கி நாய்களின் தோற்றத்தை பற்றி பார்ப்போமே ஆனால், அனைவராலும் ஏற்றுக்கொள்ளதக்க உருவம் அதற்கு இல்லை. ஆம், இந்நாயின் சிறப்பும், இத்தோற்றம் தான் அது போலவே,  இவற்றை பற்றிய எதிர்மறை எண்ணமும்,  இத்தோற்றம் தான் ஏற்படுத்துகிறது. இவை முடியில்லா வழு வழுப்பான தோல் கொண்டதால் இந்நாய்கள் நோயினால் தாக்கப்பட்டவை என்று தப்பான புரிதலால் அவைகளுக்கு சமுகத்தில் இடம் மறுக்கப்பட்டு வருகிறது. மீன் பண்ணைகள் அதிகமாவதாலும் இவை அழிக்கப்பட்டு வருகிறது. ஆனால், வாத்து மற்றும் சில கோழிப்பண்ணைகளில் இன்றும், வளர்க்கப்பட்டுதான் வருகின்றது.

 நிறம்:

 கறுப்பு, வெள்ளை மற்றும் பழுப்பு நிறங்களில் காணப்படுகிறது.

இந்தியன் பரிய  நாய்கள்

     

 நீங்கள் நினைப்பது சரிதான் இது நம் தெரு நாய்கள் தான். இவையும் நம் நாட்டு நாய்களே இவை அனைத்து சீதஉஷ்ண நிலையிலும் வாழக்கூடியது. இந்தியா  முழுவதும் சுமார் 2.5 கோடி தெரு நாய்கள் உள்ளதாக சில தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக இந்த தெரு நாய்களை யாரும் விருப்புவது இல்லை சில நல்ல உள்ளம் கொண்டவர்கள் மட்டுமே இந்த பரிய நாய்களை எடுத்து வளர்க்கின்றனர். பல இடங்களில் இந்த நாய்களால் தொல்லை என கொல்லவும் படுகின்றது. இந்த வகை நாய்கள் பல நிறங்களில் பல உயரங்களில் நம் தெருவில் சுற்றுவதை பார்ப்போம். எல்லா நாய்களுமே கண்டிப்பாக நன்றாக காவல் காக்கும். தைரியமாக இந்த நாய் குட்டி கிடைத்தால் எடுத்து வீட்டில் வைத்து வளர்க்க நினைப்பவர்கள் தளரமாக வளர்க்கலாம்.  

        நம்  தமிழ் நாட்டின் நாய் இனங்கள் அனைத்தையும் நாம் காக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பல நாட்டு நாய் இனங்கள் அழிந்து விட்டது. மீதம் இருக்கும் மற்ற இனங்கள் தெரு நாய்கள் ஆக்க பட்டு வருகின்றது. ஒரு சிலரால் மட்டும் சரியான முறையில் பாதுகாக்க படுகின்றது.      மற்ற எந்த ஒரு அந்நிய நாட்டின் நாய் இனங்களுக்கு இல்லாத வரலாறு நமது நாட்டு நாய்களுக்கு உள்ளது.  நம் நாட்டு இனவழி நாய்களை காத்து எதிர்கால சந்ததியினர்க்கு கொண்டு செல்ல வேண்டும்.

முந்தைய பகுதிக்குச் செல்ல...

தமிழ்நாட்டு நாய் இனங்கள் பகுதி 1

What's Your Reaction?

like
7
dislike
0
love
1
funny
0
angry
0
sad
1
wow
4