நிலா! நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!

என் சிறுவயதில் என் தாய் பால் சோறு உன்னை காட்டி ஊட்டிய போது அதை நான் என் கண்கள் வழியே சாப்பிட்டேன். அன்று உன்னை பற்றி பாட எனக்கு வாயில்லாமல் போனது பின்பு வளரும் போது உன்னை பற்றி எழுத வாய்ப்பில்லாமல் போனது. அதனால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் உன்னை பற்றி பாடி எழுதுகிறேன்!!

நிலா! நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!

வெண்ணிற மேக மலைகளில் தன் கனிவான ஒளியை பரப்பி ஊர்ந்து இரவு உலா வரும் நிலா! சூரியனின் வெப்பத்தால் உருகி உருமாறி உலகை தன் ஒளியால் வசியம் செய்யும் உன்னதத்தின் கைவண்ணம் நீ நிலா

நிலா! நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!!

என் சிறுவயதில் என் தாய், எனக்கு பால் சோறு நிலா! உன்னை காட்டி ஊட்டிய போது அதை, நான் என் கண்கள் வழியே சாப்பிட்டேன்! அன்று உன்னை பற்றி பாட எனக்கு வாயில்லாமல் போனது.பின்பு வளரும் போது உன்னை பற்றி பாட எனக்கு வாய்ப்பில்லாமல் போனது. அதனால், இந்த இக்கட்டான சூழ்நிலையில் உன்னை பற்றி பாடி எழுதுகிறேன்!

நிலா! நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!!

இயற்கை படைத்த முதல் கவிதை எனும் இன்பமான நதியின் ஊற்று! கவிதை புனையோர்க்கு எழுத ஆரம்பித்த நாள் முதல் இவ்வுலகம் அழியும் வரை நீ கொடுக்க போவது புது புது கூற்று!

நிலா! நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!!

இரவில் உன் உறவில் கலித்திருக்கும் நான். நீ மெழுகு போல் தேய்ந்துருகி தொலையும் போது உன்னை தேடுகிறேன்! பின்பு நீ வளைந்து வளரும் போது உன்னை சந்த வரிகளோடு நாடுகிறேன்!

நிலா! நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!!

 இரவு வாழ்த்து சொல்ல வந்த சந்திரன்! நட்சத்திரங்கள் மத்தியில் மாயாஜால வித்தைகள் காட்டும் மந்திரன்! பெருங்கடலையும் அலை பாய வைக்கும் எந்திரன்! காரிருளில் கவி நடனமாடி தன் அழகை பிரதிபலிக்கும் வெள்ளை இந்திரன்! இருளில் மூழ்கும் உலகின் இருள் போக்கி வெளிச்சம் கொடுக்க வந்த இயற்கையின் அழகு கதாபாத்திரன்! அம்புலி பருவ குழந்தையின் உருவமாய் பெருங்காவியங்கள் படைக்க வந்த புலவர்களின் புத்திரன்!

நிலா! நீ இன்று  சென்று  நாளை ஒரு கவிதை கொண்டு வா!!

உன்னை பற்றி எழுத நினைத்தேன் என்னை கவிஞனாக மாற்றி நிலா நீ அழகு பார்த்தாய்! உன்னை பற்றி கவி வடிக்க யோசித்து என் நகங்களை கடிக்க ஆரம்பித்தேன் நிலா நீ நான் கடித்தெறிந்த நகங்களின் வடிவில் ஆயிரம் பிறைகள் கொண்டு எனக்கு கவிப்பொருள் தந்தாய்!

நிலா நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!!

இரவில் புல்வெளி நனைக்கும் மூடுபனியில் வாட்டி எடுக்கும் வாடைக்காற்றில் என் உறக்கம் திருடி, என் கனவில் பதுங்கிய வானம் காணாத வெண்ணிலா ஒன்று என் கவிதை வழி நடைப்போடுதே! நிலா உன் நினைவுகள் என் நெஞ்சில் பல கவிப்பாடுதே! இதை எழுதாமல் என்னுள் பூட்டி வைக்க என் எண்ணங்கள் எடை கூடுதே!..

நிலா! நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே! நீல மயில் வானம் விட்டு வாராயோ! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை, நீல நிறத்தையும் நிலா உன்னையும் பிரித்து விட்டால் வானமே இல்லை. அப்படி நீ  நிலா கீழிறங்கி வந்து விட்டால் நட்சத்திர பூக்கள் வாடதே! மேகம் உயிர் இழந்த தேகமாய் மாறுதே! திரும்பி நீ விண்ணை அடைந்தால் அவைகள் அனைத்தும் ஆவி கொண்டு நடமாடுதே! உயிரோட்டம் கொண்டு, தேரோட்டம் சென்று இரவு உலகை ஆளுதே!..

நிலா! நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!!

மாலை முதல் காலை வரை, உச்சி வானம் வந்த மூன்றாம் பிறை, விளக்கு வைத்த நேரத்தில் நிலா நீ தேய்வதென்ன தேவ கன்னியே! இப்படி தேய்ந்து! தேய்ந்து!! மாதம் ஒரு இரவு காணாமல் போகிறாய். இரவின் உறவில் நாட்களை கழித்த எனக்கு நாளை காலை எப்படி விடியப் போகிறதோ! ஆனால், என் கைவசம் உந்தன் சந்தம்! அதுவே, எந்தன் சொந்தம்!..

நிலா! நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!!

நாங்கள் பார்க்கும் வானத்தின் தொடக்க புள்ளியாக சூரியன், முடிவு புள்ளியாக நீ சந்திரன், இரவில் உன் பங்கு சுட்டாலும் வெண்மை தரும் சங்கு. வளர்பிறையில் நீ தில்லை தலை வில்லை. தேய்பிறையில் நீ ஆண்டி கை தோண்டி. உன் குணம் அம்புலி பருவ பிள்ளையின் மனம்! உன் தன்மை இளம்பஞ்சின் மென்மை. உன் உருவம் உலகிற்கு தன்னிகரற்ற மெய் பொருளை காட்டு அருவம்!!..

நிலா! நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!!

ஒரு இரவில், அரை உலகை, மனிதர்களின் கண்கள் ரசிக்கும் வேகத்தில் பயணிக்கிறாயே! நிலா நீ சவாரி செய்யும் வெள்ளை மேக குதிரையின் திறன் என்னவோ!.. இப்படி பயணிக்க நீ கணக்கிட்ட சூத்திரம் தான் என்னவோ! மீண்டும் ஒரு பகலில் மறு அரை உலகை கடந்து ஓயாது உலா வலம் வருகிறாராய்! இதன் காரணமாகவே நீ தேய்ந்து வளர்கின்றாயோ!!..

நிலா! நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!!

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்தி சாயும் பொன் மாலைப் பொழுது! வானம் தன் நீள உடையை மாற்றி கொண்டு, நிலவே! நீ நட்சத்திரங்களோடு சேர்ந்து செய்ய போகும் நடன அரங்கேற்றத்தின் அழகை! இந்த உலகம் பார்க்க, கருப்பு திரையை அரங்கமாக தன் அங்கம் முழுவதும் விரித்து உள்ளது. ஆட்டம் முடிந்து நிலா நீ! போகையில், எங்கள் வாழ்த்துகளை பெற்றுக்கொள்ளவும், உன் ரசிகர்களான எங்களுக்கு கையொப்பம் இடவும் விண்ணைத் தாண்டி வருவாயா!

நிலா! நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!!

உள்ளதை உள்ளபடி கூறும் செய்யுளோ! உரைநடையோ! இலக்கணமோ! மற்றும் கதையோ!. இல்லை இல்லாததையும் உள்ளது போல் அழகாய் உருவகம் கொடுக்கும் கவிதையோ! இவை எல்லாவற்றையும் அடிப்படையாக கொண்ட தமிழ் மொழியின் வரலாற்று காவியங்கள் அனைத்தும் நிலா உன்னை பற்றி ஒரு வரி எழுதும் பொழுது தான். அவை, புத்துயிர் பெற்றிருக்கின்றன! இவ்வாறு, தமிழ் மொழியின் கிரீடத்தில் இன்றும் ஜொலிக்கும் வெள்ளை வைரம் நீ நிலா!!.

நிலா! நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!!

நிலவே! உன் அழகை பாட தென்றலை தூது விட்டேன். முதலில் கம்பன் வந்தான் நிலவே! உன்னை கண்டு சீதை என பாவித்து கவி வடித்தான், உன் அருகில் ராமலட்சுமணனை தேடினான். பின், காளிதாசன் அரங்கேறினான், வெள்ளை நிலவே! உன்னை கண்டு சகுந்தலை என்றான், உன் மேக கூந்தலை ரசித்து துஷ்யந்தனை தேடினான். அவனை தொடர்ந்து பாட்டுக்கொரு  பாரதி மேடையேறி பாட வரி எடுத்தான், பால் நிலவே! உன்னை கண்டு வெள்ளை கண்ணம்மா என்றான், செல்லம்மா என்று புதுமை பெண்களைத் தேடினான். இப்படி முன் சென்ற கவிஞர்கள் நரை கூடி உன் பிறை சேர்ந்தார்கள். ஆனாலும், வானத்தில் உன் காட்சிகளுக்கு இன்றும் திரை மூட வில்லையே! நிலா, உன்னை பாடி வர்ணிக்க நான் என்ன காவியங்கள் படைப்பது!..

நிலா! நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!!

இரவு வான்மேகம் நிலா! உன்னை மூட நினைத்து தோற்று போவது போல, உன்னைப் பற்றி யோசிக்கவே கூடாது, என்று என் கற்பனை எண்ணங்களை தடை செய்து பார்த்தேன். ஆனால், உன் நினைவுகள் என் ஞாபகம் விட்டு அகலாமல் என் உணர்ச்சிகளால் மடை திறந்து பாயும் வெள்ளம் போல, கொட்டி தீர்க்கும் வார்த்தை அருவியாய், என் பேனாவின் வழி சிதறிய பட்டைத் தீட்டிய நட்சத்திரங்களோடு, வான் மேகம் தாண்டி நிலா நீ விண்ணில் வெளிப்பட்டது போல், கவித்தமிழ் வடிவில் என் நோட்டு ஏட்டுக் காகிதங்களை அழகடைய செய்து பண்பாய் பிறந்தாய் நிலா நீ கவிதையாக! நானும் தோற்று போனேன் அந்த மேகங்களை போல்!..

நிலா! நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!!

நிலா! உன்னை பற்றி எழுத வேண்டாம் என்று நினைத்து என் காகிதங்களை கருப்பாக்கினேன். ஆனால், நீயோ! உன் வெண்ணிற ஒளியை என் பேனாவின் மைய்யாகி என்னை எழுத வைக்கிறாய்! என் எழுத்துக்கள் மேல் நட்சத்திரங்கள் கொண்டு புள்ளி வைக்கிறாய்! என் முற்றுப்புள்ளியை தொடர் புள்ளியாய் மாற்றி என்னை கவிஞனாக தொடர செய்கிறாய்!!

நிலா! நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!!

நிலவே!  உன் அழகை பாட தென்றலை தூது விட்டேன். முதலில் கம்பன் வந்தான் நிலவே! உன்னை கண்டு சீதை என பாவித்து கவி பாடினான். உன் அருகில் ராமலட்சுமணனை தேடினான். பின் காளிதாசன் அரங்கேறினான், வெள்ளை நிலவே! உன்னை சகுந்தலை என்றான். உன் மேக கூந்தலை ரசித்து, துஷ்யந்தனை தேடினான். அவனை தொடர்ந்து பாட்டுக்கொரு பாரதி மேடையேறி பாட வரி எடுத்தான் பால் நிலவே! உன்னை கண்டு வெள்ளை கண்ணம்மா என்றான், பின் செல்லம்மா என்று புதுமை பெண்களைத் தேடினான். இப்படி, முன் சென்ற கவிஞர்கள் நரை கூடி உன் பிறை சேர்ந்தார்கள். ஆனாலும், வானத்தில் உன் காட்சிகளுக்கு இன்றும் திரை மூட வில்லையே! உன்னை பாட நான் என்ன காவியங்கள் படைப்பது...

நிலா! நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!! 

இன்று பூமியில், மடை திறந்த நதி அலைகள் போன்று பெய்த மழையைத் தன்னுள் உள்ளடக்கிய உலகின் தொங்கும் தெப்பக்குளம் இந்த வானம். அதில், மேக இலைகளின் மத்தியில் நீந்தும் அழகே உருவான ஒற்றை ஆகாயத்தாமரை நீ நிலா! மழை நீராய் தொங்கும் குளம் வடியும் போது நிலா, நீயும் பூமி வந்தாயோ! அருவியில் வீழ்ந்து நதிகளில் கலந்து, முக்கடல் சேர்ந்தாயோ! பின் அதிகாலை ஆதவன் அரவணைப்பில் ஆகாயம் சென்று இரவில் விண்மீன்களோடு சேர்ந்து தங்க மீனாய் நீந்த பிறப்பிடம் அடைந்தாயோ!

நிலா! நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!!

நேற்று போல் இன்றும் இன்று போல் நாளையும் இல்லா வண்ணம் நாள் ஒரு தேக வடிவமைப்பு கொண்டு என் கற்பனை மேடையில் மடல்ப்பூர்த்த முல்லை நீ நிலா! ஜன்னல் ஓரம் நின்றிருந்தேன். கண் மயங்கும் கவிதை ஒன்று கவிமணி நீ தர காத்திருந்தேன். வான் வீதியில் வெள்ளை நிலா உன்னை பார்த்திருந்தேன்! இரவில் உன் வெள்ளை தாமரை கண்விழியில் நானும் பூத்திருந்தேன்!.

நிலா! நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!!

ஆழ்கடலின் கிளிஞ்சலில் பிறக்கும் ஆழி முத்து வண்ண மீன்களோடு, ஆழத்தில் இருப்பதை கண்டு! முத்து குளித்து!! அதை என்தன் கை வசம் சேர்த்துக் கொண்டேன். ஆனால், வான் கடலின் மேக கிளிஞ்சலின் மத்தியில் விண்மீன்களோடு உயரத்தில் இருக்கும் நிலா உன்னை சேர்த்துக் கொள்ள என்ன செய்வேனோ? ஆனால், ஒன்று செய்வேன் உன் உயரம் தொட என் கற்பனை கவிதை வரிகளை அடுக்கி கொண்டே இருப்பேன்!!...

நிலா! நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!!

அலைச்சலை அலைகழிக்கும் அந்தி சாயும் பொழுது, மாலை சூரியன் நிலா நீ! உதிக்கும் வேளை. கருப்பு நிறத்திலும் அழகு உண்டு என்பதை வெளிச்சம் போட்டு காட்ட வந்த இரவின் துணைவன் இவன் சந்திரன்! பிழைப்பிற்காக சென்ற மனிதன் முதல் இரை தேடி சென்ற பறவைகள் வரை தன் வீடு திரும்பும் வேளை, உயிர்கள் இளைப்பாற கிடைக்கும் அழகான இரவு நேரம்! இரவின் ரசகிய அழகின் அருமை நிலா நீ இல்லா விட்டால், இவை, அனைத்தும் வெறுமை. அப்படி ஆக வண்ணம் உந்தன் அரை வட்ட முகத்தை ஆவது வானத்தில் பதிய செய்வாயா! எங்கள் நெஞ்சை குளிர செய்வாயா!!...

நிலா! நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!!

விண்வெளியில் விதைத்த நட்சத்திர நவமணிகள் தோட்டத்தின் நடுவே! சக்கரவான கோட்டைனுள் மேக பளிங்கறையில், அலங்கார வசிகரம் செய்யும் எழில்நிலா நீ வான் வீதி தேரோட்டம் சென்று இரவு உலகை கானும் விழா, கருமுகில் சூழ்ந்த வான் மழையால் தாமதமாகிறதோ! ஆனாலும், தேவ கன்னியே நீ! மாளிகை மாடத்தில் நின்று பார்த்த உன் வெட்டும் விழி பார்வை ஒளி உன் ஆபரணங்களில் பட்டு நிறப்பிரிகை அடைந்து வானத்தில் வானவில்லாய் ஆளுகை செய்து கொண்டிருக்கிறாய்!...

நிலா! நீ இன்று சென்று நாளை ஒரு கவிதை கொண்டு வா!!

நிலா நீ! நாணமடைந்து,  வெட்கத்தில் இந்த மண் பார்க்கும் பாவனையில், என் மெய் சிலிர்க்க வைத்த வான் சிற்ப மகளே! பேரழகு பெற்ற ஒப்பில்லாத வானவளே! நேற்றும், இன்றும்  விண்ணில் நிரந்தரம் நிறைந்தவளே!! பூஜ்ஜிய வடிவில் இரவில் ராஜ்ஜியம் செய்து உலகை ஆள்பவளே! உலக கவிதை தொழில்நுட்பத்தின் முழுமதி நீயே! காலத்திற்கு ஏற்றவாறு தன் உருவ அமைப்பை மாற்றி அமைத்து கொள்ளும் வான் கணினியே!! 

நிலா! நீ இன்று சென்று என்றும் கவிதை கொண்டு வா!!

ராஜமாணிக்கம்.

What's Your Reaction?

like
5
dislike
0
love
3
funny
0
angry
0
sad
0
wow
1