தற்சார்பு பொருளாதாரத்தை உயர்த்தும் பனைமரம்

வீட்டுக்கு படலாகவும், வயலுக்கு வேலியாகவும், குளங்கள், ஏரிகரைகள், ஆற்றங்கரைகள் போன்றவற்றின் நீர் ஆதாரங்களையும், பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாக்கும் உயிர் வேலியாகவும், தென்ன காச்சி நின்னா கருக்கு மட்டையாலா காவல் காக்கும் மரம், பனைமரம். பந்தல் இல்லாமல் வீட்டு நிகழ்ச்சி மற்றும் கல்யாணக் காட்சி உண்டா ! பனங்குலை இல்லாமல் பந்தலுக்குதான் அழகுண்டா !! காலங்காலமாக தமிழர் மரபு இதுதானே. கட்ட வண்டி, மாட்டு வண்டி, பட்டணம் போகும் ரயிலு வண்டி எத்தனையோ வண்டி இருந்தாலும் நுங்க நோன்டி திண்ணுட்டு அத வண்டி செய்து வெயிலோடு விளையாடி, மழையோடு உறவாடி ஊரையே சுற்றி வந்த பொற்காலத்தை தந்த மரம், பனைமரம். முப்பாட்டன் காலமுன்னமே கலவரமில்லாமல் கையில் புடிச்சி வெடி வெடிக்க பனைஓலை பட்டாச போல ஒசத்தியான வெடி தந்த மரம், பனைமரம். பாரம்பரிய திருவிழாச் சந்தையில் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களாக! பெண்களுக்கு வீட்டுச் சாமான்களாக!!, ஆண்களுக்கு மகிழ்ச்சி தரும் பானமாக!!! ஏன்? படையலில் நெய்வேத்தியப் பொருளாக திருவிழாக்களை சிறப்பித்த மரம், பனைமரம்.

தற்சார்பு பொருளாதாரத்தை உயர்த்தும் பனைமரம்

பல்லுயிர் பெருக்கத்தில் பனைமரத்தின் பங்கு :

ஆற்றங்கரைகளிலும், குளங்களின் மேற்பரப்பிலும், கடற்கரை மணற்பாங்கான இடங்களிலும் சாரிசாரியாக பனைமரங்களை நம் முன்னோர்கள் நட்டு வைத்தார்கள். காரணம், பனைமர வேர்கள் மண் அரிப்பை தடுக்கும்! 100 அடிகளுக்கும் கீழே சென்று தண்ணீர் வளத்தை அரணாகக் காக்கும்.

இயற்கைச் சூழலை பாதுகாக்க, பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாப்பு அரணாக உலக அளவில் சூழிலியாளர்கள் பனைமரத்திற்கே முதலிடம் தருகிறார்கள். ஏனெனில், பனை மரத்தடியில் பூச்சிகள், கூட்டுப்புழுக்கள் அடைக்கலமாகும். பனை மரக் கிளையில் தூக்கணாங் குருவிகள் கூடுகட்டும், பனைமரத்தில் தொங்கும் வௌவால்கள் கணக்கிடலடங்கா கொசுக்களை கவ்வி விழுங்கும், இன்னும் மைனாக்கள், ஆந்தைகள், வானம்பாடிகள், பருந்துகள் என பனைமரத்தை புகலிடமாக கொண்ட பறவையினங்கள் பற்பல. இன்றைக்கு நாம் பனைமரத்தை காக்க தவறியதால் இந்தப் பல்லூயிர்களையும் சேர்த்தே இழந்து கொண்டிருக்கிறோம்.

கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் வந்து பயிர்களை அழிக்குதே எதனால? பல்லுயிர் பெருக்கத்தின் உணவு சங்கிலியில் அடுத்த நிலையான பறவைகளின் இருப்பிடமாகவும், வாழ்வாதாராமாகவும் இருந்த, இருக்கின்ற மரங்களை அழிப்பதால.

 

தமிழனை கொண்டாட்டத்தின் உச்சம் தொடச் செய்த பனைமரம்:

வீட்டு விழாவிற்கு வருபோரை முதலில் வரவேற்பதும் இந்த பனைமரம் தானே ! குறுத்தோலை தோரணம், பனை ஓலை (பாய்)  தட்டி விரிப்பில் தொடங்கி, பரிமாறப்படும் பல பலகாரங்கள் வரை, விருந்து உபசரிப்பில் தகுந்த மரியாதையாக விருந்தினரால் எதிர்ப்பக்கப்படும்!! அனைத்தையும் பூர்த்திச் செய்யும் மரம், பனைமரம். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் விழாவின் வரவேற்பில் தொடங்கி பந்தி முடிந்து இலை எடுக்கும் கூடை வரை அனைத்தையும் தந்த மரம், பனைமரம்.  பெத்தவ தூக்கி பால் கொடுத்தலும் அடக்க முடியாது பிள்ளையின் அழுகைய ஓல கிளுக்கிளுப்பு தந்து ஒரு நொடிக்குள்ள சிரிக்க வைக்கும் மரம், பனைமரம்.

பனம்பூவை கொளுத்தி, பக்குவமா அரைச்சி, மட்டைய பிளந்து மாவ உள்ள வைச்சி கட்டி, கங்க வச்சு சுத்தனாக்கா நெருப்பால பூ பூக்கும், சந்தோச தீ கொடுக்கும் மரம், பனைமரம். சொக்க பன கொலுத்தி கார்த்திகை கொண்டாடி, மகிழ்ச்சியா தீப்பிடிக்க ஆட்டம் போட்டு விளையாடி, தீ அடங்கிய பின்னாடி, கரிமட்டைய கொண்டு கருப்பு கழித்த மரம், பனைமரம். தென் தமிழகத்தில் இன்னும் கூட இந்து சமய விழாக்களில் பனை ஒலைத் தோரணங்களும் அலங்காரங்களும் செய்யப்படுகின்றன. கிறிஸ்த்தவர்களின் ஞாயிறு குருத்தோலை விழாக்கள் இன்றும் பிரசித்தம் பெற்ற பனைமரம்.

 

பிணியை விரட்டிய மருத்துவப்பணியில் தலைசிறந்த மரம்:

அச்சில் வார்த்த தங்கத்தை நம்மால் உண்ண முடியுமா? முடியாது. சரிதான், ஆனால் நம்மால் அச்சில் வார்த்த பனைதங்கத்தை உண்ண முடியுமே!  இங்கு பனைதங்கம் என்று குறிப்பிடப்பட்டது பனைவெல்லம் ஆகும். இப்படி குறிப்பிடுவதற்கான காரணம் இதோ, தங்க தாதுக்களை சிறிது சிறிதாக சேர்த்து அதை நெருப்பில் உருக்கி, அச்சில் வார்த்த கட்டித் தங்கத்தை போல். ஒவ்வொரு பனைமரமாக ஏறி சிறிது சிறிதாக சேமிக்கப்பட்ட பதனியை பதமாக காய்ச்சி, பக்குவமா பாகு கிண்டி அச்சில் வார்த்தெடுத்தால் பனைதங்கம் என்னும் பனைவெல்லம் கிடைக்கும். இப்படி தங்கத்திற்கு கிடைக்கும் மவுசு பேச்சு ஏனோ பனைவெல்லத்திற்கு கிடைக்காமல் போச்சு... என்னடா! இது. தங்கத்தோடு பனைவெல்லத்தை ஒப்பிடுகிறானே! என்று யோசிக்கிறீர்களா? தங்க ஆபரணங்கள் நம் வெளிப்புற அங்கங்களை பொலிவடைய செய்கிறது. அதேபோல், பனைவெல்லம் நம் உட்ப்புற அங்கங்களை பொலிவடைய செய்கிறது. சர்க்கரை (வெள்ளை சீனி) இல்லாமல் உங்களால் வாழமுடியுமா? முடியாது என்று சொல்வீர்களே! ஆனால், அப்போது உங்களால் சர்க்கரை நோய்யில்லாமலும் வாழமுடியாது என்பதுதான் கசப்பான உண்மை..

ஹோமியோபதி, அல்லோபதி, ஆயுர்வேதம், யுனானி எல்லத்துக்கும் மூத்த சித்தமருத்துவத்தில் நோய் தீர்க்கும் முதல் மருந்தாக பனைவெல்லத்தை தரும் மரம், பனைமரம். பனைவெல்லத்தில் அதிகமான கால்சியம், இரும்பு, மெக்னீசியம், விட்டமின்கள் உள்ளன. எலும்பிற்கு பலம், உடலுக்கு குளிர்ச்சி, மொத்தத்தில் ஆரோக்கியம். ஆனால் வெள்ளைச் சீனியோ சல்பர்டை ஆக்சைடு, சோடியம் ஹைட்ரோசல்பேட், பாலிஎலக்ரோலைட், பாஸ்போரிக் ஆசிட், பிளிச்சிங் பவுடர் போன்றவை சேர்கப்பட்ட நச்சு. சக்கரைவியாதி தொடங்கி சகலவியாதிகளுக்குமான மூலக்கூறு. ‘பனங்கள்என்பதை ஒரு ஆபத்தாக அடையாளப்படுத்தியதால் பனைமரத்தின் ஓட்டுமொத்தப் பயன்பாடுமே இல்லா தொழிக்கப்படும் அவலம் இன்னும் தொடரத்தான் வேண்டுமா? பன்நெடுங்காலமாக பனங்கள் என்பது பல நோய்களுக்கு தீர்வாக இயற்கை மருத்துவத்தால் அணுகப்பட்டுள்ளது. இதற்கு சங்க இலக்கியங்கள் தொடங்கி சமீபகால பெரியார் எழுத்துக்கள் வரை எண்ணற்ற ஆதாரங்களை காட்டலாம். நமது பாரம்பரியத்திலுமே கூட பனங்கள் என்பதை மன்னர்களும், புலவர்களும், அரசபடையினரும், குடியானவர்களும் சாப்பிடும் வழக்கம் இயல்பானதாகவே பார்க்கப்பட்டுள்ளது.

 

உலக அளவில் பனை வளர்ப்பு:

பனைமரங்கள் உள்ள நமது பக்கத்து மாநிலங்களிலும் சரி, பனைமரங்கள் தழைத்தோங்கும் 108 நாடுகளிலும் சரி பனையிலிருந்து கிடைக்கும் பானத்திற்கு தடையில்லை. அதை இயற்கை பானமாகத்தான் அங்கீகரித்துள்ளனர். நமது இந்திய அரசின் அரசியலமைப்புச் சட்டப்படியுமே கூட பனையிலிருந்து கிடைக்கும் இயற்கையான பானம், உணவாகத்தான் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்போதும் இலங்கையில் பனை விவசாயத்திற்கு பிரதான முக்கியத்துவமுண்டு. இதற்காகவென்றே தனித்துறையை உருவாக்கி ஒரு அமைச்சரை நியமித்து செயல்படுமளவுக்கு சிறப்பான வருமானமும் பனைமர வளர்ப்பில் பார்த்து வருகிறது இலங்கை அரசு. பனங்கள்ளு, பதநீர் போன்றவை அங்கே முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை பானம். பனை மரத்திலிருந்து கிடைக்கும் இயற்கை பானம், பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கிலிருந்து உருவாக்கப்படும் சத்துமாவு, பனம் பருப்பு போன்றவை உள்நாட்டு சந்தையில் முக்கியத்துவம் கொண்டவை மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றது.

இதேபோல் நமது பக்கத்து மாநிலமான கேரளாவிலும் பனைமரத்துக்கு ஏக மவுசு தான்! இதற்கு பாரம்பரியத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் பற்றே காரணம். பனை என்பது சேர வம்ச மன்னர்களால் போற்றப்பட்ட மரம். சேர மன்னர்கள் பனம் பூவை மாலையாக தங்கள் தோள்களில் அணிந்தார்கள்! இன்றைய மலையாளிகள் என்பவர்கள் ஆதிகாலத்தில் தமிழர்களாக அறியபட்டவர்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் பல்லுயிர் பெருக்கத்தின்

 

பனைமரம் அழிக்கப்பட்டு வருவதற்கான அரசியல் காரணம்:

பனைவெல்லம் பயன்பாடு படிப்படியாக மட்டுப்படுத்தப்பட்டு, வெள்ளைச்சீனி பயன்பாடு திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. கரும்பிலிருந்து கிடைக்கும் மொலாசஸ் மதுபான உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தில் டாஸ்மாக் மது ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதன் பின்னணியோடு பனைமரப் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்ட தடைகளை புரிந்து கொள்ள வேண்டும். மதுபான வியாபாரிகள், மதுபான உற்பத்தியாளர்கள், இவர்களால் ஆதாயம் பெரும் அதிகாரவர்க்கத்தினர் பனைமரத்தை பகையாக பார்த்தனர். பனை மரத்திலேறி பதநீர் இறக்கிய தொழிலாளர்கள் கூட கள் இறக்கியதாக கைது செய்யப்பட்ட சம்பவங்கள் அநேகம். இந்த அவமானங்களை தாங்க முடியாமல் பனைமரம் ஏறும் தொழிலை கைவிட்டனர் பலர்.

சகித்து கொண்டு பணி செய்த பனை ஏறி தொழிலாளிகளும் தங்கள் அடுத்த தலைமுறையை இத்தொழிலுக்கு தர மனம் ஒப்பவில்லை. விளைவு பனைமரம் ஏறும் கலையை கற்றவர்கள் மிகவும் அரிதாகிவிட்டனர். பனைமரங்கள் இருந்தும் அதன் பலனை அறுவடை செய்யவோ, பயனடையவோ வாய்ப்பற்ற நிலையில் பல ஊர்களிலும் இன்று பனைமரத்தை செங்கல் சூளைகளுக்கு பலிகடாவாக்கி கொண்டுள்ளனர் மக்கள்.

 கொங்கு மண்டலத்தில் மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் பனைமரங்கள் வீழ்த்தப்பட்டு செங்கற்சூலைகளுக்கு போகின்றன. இராமநாதபுரத்தில் 2 கோடிக்கு மேற்பட்ட பனைமரங்களும், பனைசார்ந்த தொழில்களும் செழித்தோங்கிய காலம் ஒன்றிருந்தது. வானம் பார்த்த பூமியான வறட்சி மாவட்ட விவசாயிகளுக்கு பனை மரமே வாழ்வு தந்தது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துகுடி மாவட்டங்களில் பனைமரங்கள் பூத்துகுலுங்கிய இடங்களிலெல்லாம் இன்று ரப்பர் தோட்டங்களும், கற்றாலைகளும் காணக்கிடைக்கின்றன. இந்தப் பகுதியில் பனை ஓலைகளைக் கொண்டு கண்கவர் அழகுப் பொருட்களை செய்த அந்த எண்ணற்ற எளிய கைவினைஞர்கள்அற்புதமான கலைஞர்கள்ஆதரிப்பாரின்றி வேறு, வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டனர். ஆயினும் கோயில் திருவிழாக்களில் இன்றும் விற்கப்படும் பனை ஓலை அழகுப் பொருட்கள், திருவிழா அலங்காரங்களைக் கொண்டு, “அடடா இந்த கலைகளும், கலைஞர்களும் இப்போதும் எஞ்சியிருக்கிறார்களேஎன்று சந்தோசம் ஏற்படுகிறது.

 

தற்சார்பு பொருளாதாரத்தை உயர்த்தும் பனைமரம்:

பனைமரத்திலிருந்து எடுக்கப்பட்ட பானத்தை நான்கு மணி நேரத்திற்குள் பருகிவிட்டால் அது தேவாமிர்தம் அல்லது ஊட்டசத்துமிக்க அருமருந்தென்றே சொல்லலாம். நான்கு மணி நேரத்திற்குப் பிறகு அது மெல்ல, மெல்ல புளிக்கத் தொடங்கும். புளிப்பின் வீரியம் கூடினால் அதில் போதையின் அம்சம் ஏற்பட்டுவிடுகிறது. இது உடலுக்கு கேடல்ல. ஆனால், அளவுக்கு மீறும் போதோ, அல்லது பனங்கள்ளோடு விரும்பத்தாகவற்றை போதை ஏறுவதற்காக சேர்ப்பதாலோ தான் பிரச்சினை ஏற்படுகிறது.

பனங்கள் புளிக்காமல் இருக்க சுண்ணாம்பு சேர்த்தால் அது உடலுக்கு ஊட்டசத்தாகும் பதநீராகிவிடும். இன்றைய கேடுகெட்ட பன்னாட்டு குளிர்பானங்களுக்கு சிறந்த மாற்றாக இதை பிரபலப்படுத்தினாலே போதும் இந்தியாவில் ரூ 1000 கோடி அளவுக்கு இதற்கொரு சந்தையை உருவாக்க முடியும். டாஸ்மாக் மதுவில் கிடைக்கும் வருமானத்தை விடவும் அதிக வருமானத்தை இது அரசுக்கு ஏற்படுத்தி தரும். அனைத்து பள்ளி, கல்லூரி, வர்த்தக நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், பெட்டிகடைகள்என எங்கெங்கும் பதநீர் விற்பனை செய்யபட வேண்டும். இதனால் லட்சோபலட்சம் விவசாயிகளும், விவசாயக்கூலிகளும், வியாபாரிகளும் பயன்பெறுவார்கள்.

 

மதுவை அரசாங்கமே விற்கலாம் என்று நியாயப்படுத்தப்பட்டுள்ள இந்தக்காலத்தில், அது ஏன் ஆல்கஹால் அதிகமுள்ள அயல்நாட்டு பாணி மதுவாக மட்டும் இருக்கவேண்டும்? என்பது தான் தமிழ்நாட்டில் பாரம்பரியமாக பனை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் பல லட்சம் விவசாயிகள் மற்றும் பனையேறி தொழிலாளர்களின் கேள்வியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பனை மீட்பை ஒரு இயக்கமாக, பிரச்சாரமாக பல இயக்கங்கள் செய்து வருகின்றன.

 

குறிப்பாக நல்லசாமி தலைமையிலான விவசாயசங்கம் இதற்காக தொடர்ந்து இடையறாது போராடி வருகிறது. இதுபோல திருவண்ணாமலை கூக்கூ அமைப்பு, திருநெல்வேலி சிட்டுகுருவி பாதுகாப்பு இயக்கம், பூவலகின் நண்பர்கள், நம்மாழ்வாரை பின்பற்றும் சூழலியலாளர்கள், அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆங்காங்கே பனை விதைகளை நட்டு வருகின்றனர். ஜல்லிகட்டுக்கு இளைஞர் படை திரண்டது போல பனை மீட்புக்கும் அதைவிட வீரியமாக எதிர்காலத்தில் திரளக்கூடும். தமிழக அரசாங்கத்தின் தேசிய மரமாக பனைமரம் உள்ளது. வெறும் பெயரளவுக்கு இருந்தால் போதுமா?

 

பனங்கள்ளை பாதுகாப்பு அரண்களோடு அரசே இறக்கி, பதப்படுத்தி விற்பனை செய்யுமானால்அது முறைப்படுத்தப்பட்ட தொழிலாக அங்கீகாரம் பெறும் எனில், அது தமிழ்நாட்டின் விவசாயத்திற்கும், பனைசார்ந்த தொழில் வளர்ச்சிகளுக்கும் பெரும் பொருளாதார வளம் சேர்க்கும். அத்துடன் பனை விவசாய மீட்பும், பனைசார் தொழில்கள் மீட்பும் நம் பாரம்பரிய மீட்போடு தொடர்புடையது. நமது பாரம்பரியத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதோடு சம்பந்தப்பட்டது.

 

ஈழப்போரில் (இலங்கை) பனையின் தியாகம்:

“எட்டு திசை அதிரும், யுத்த பூமிதனில் தறிகெட்ட காடையர்கள், மக்கள் மேல் குறிவைத்தால் அவர்களை காப்பாதிய மரம், கவசம் போல் முன் நின்ற மரம், எத்தனையோ குண்டுகளையும் தன் மார்பில் ஏந்தி போராடி மண்ணில் சாய்ந்து உயிர் துறந்த மரம் பனைமரம்”. ஈழத்தில் மக்கள் மேல் நடத்தப்பட்ட தாக்குதலின் பயங்கரத்தை கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த தாக்குதல்களில் சிதைக்கப்பட்ட மக்கள் போக மீதம் இருந்தவர்கள் தஞ்சம் அடைந்த இடங்கள் பனைமர காடுகள். அப்படி தப்பி பிழைப்போரையும், தேடி கொல்லத் துடித்த காட்டு மிரண்டிகளின் விமானப்படை குண்டுகளை தன் மேல் வாங்கிக்கொண்டு அவர்களை பாதுகாத்த மரம், பனைமரம். போரினால் ஏற்பட்ட பஞ்சத்தில் தஞ்சம் அடைந்தவர்களின் பசித்தாகத்தை போக்கி அந்த இக்கட்டான நேரத்தில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து மஞ்சம் தந்த மரம், பனைமரம். இது மட்டமா சூறாவளியோ புயல்மழையோ இவற்றால் பலமாக ஏற்படுத்தப் பட்ட காற்றின் வேகமோ அதை தன் இரும்பு கரம் கொண்டு அடக்கி, மக்களை பாதுகாத்த மரம், பனைமரம்.

 “ஊரேல்லாம் ஓலமுங்க சுனாமியால சோகமுங்க அல அடிச்ச வேகத்துல கட்டிடங்களும் தாங்கலங்க, மாடி வீடும் மண்ணாச்சு, மிதக்கும் கப்பலும் தூளாச்சு, தென்ன கூட கவுந்தாச்சு பனமரத்துக்கு ஒன்னும் ஆகலங்க”. இப்படி கருப்பு வீரம் கொண்ட பனைமரத்தை உயிரவேலியாகவும், பாதுகாப்பு அரணாகவும் கடற்கரையில் வளர்த்திருந்தா சுனாமி சூறையாடி சென்ற எத்தனாயோ உயிர்களையும், அவர்களின் உடமைகளையும் காப்பாற்றிருக்கலாம்.

‘தென்ன மரத்த வச்சவன் அத திண்ணுட்டு சாவான்.

பன மரம் வச்சவன் அத பாத்துட்டு சாவான்’

இப்படி பனைமரம். தான், முழுமையாக வளர்வதற்கு ஒரு தலைமுறையை எடுத்துக்கிட்டு வளர்ந்தாலும் வளர்த்தவரின் சந்ததிகளை பாதுகாத்து, அவர்களின் பரம்பரைக்கே பயன் கொடுத்த தாயன்பு கொண்ட மரம்,  நம் முன்னோர்களின் அறிவியல், கட்டிடக்கலை, காவியங்கள், வரலாற்று சிறப்பு மிக்க காவியங்கள் அத்துனை பொக்கிஷங்களையும் நம் கையில் கொண்டு வந்து சேர்த்த இயற்கை தூதன் இந்த பனைமரம்.

பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும்,

பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும்!

 

உதவியவர்கள்.

--- சாவித்திரிகண்ணன்.

--- அதியமான்.

கட்டுரைத் தொகுப்பு.

--- ராஜமாணிக்கம்.

முதல் பகுதி:

பனைமரம் பழந்தமிழரின் தனி சொத்து

What's Your Reaction?

like
2
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
1